வளர்முக நாடுகளில் அறிவியல் கல்வி..!
"Science is not only a disciple of reason, but, also, one of romance and passion." – Stephen Hawking
"வளர்முக நாடுகளில் அறிவியல் கல்வி வெறும் மனப்பாடம் சார்ந்ததாக உள்ளது. அறிவியல் கருத்துகளைப் புரிந்து கொள்ள இயலாது. தன்னுடைய நாளாந்திர வாழ்வில் அறிவியல் எப்படிப் பயன்படுகிறது என்பது மாணவனுக்குத் தெரிவதில்லை"
இந்த கூற்றை அவர் 2000ஆண்டளவில் குறிப்பிட்டிருந்தார். அவரது கூற்று 25 ஆண்டுகள் கழித்தும் பொருந்துகின்றது. எமது கல்வித்துறையில் பல தசாப்தங்கள் கடந்தும் எந்த மாற்றங்களும் வரவில்லை என்பதையே இது சுட்டுகின்றது.
ஜேகப் பிரெக்மான் மேற்போந்த கூற்று, வளர்முக நாடுகளில் அறிவியல் கல்வி மீதான ஒரு முக்கியமான விமர்சனத்தை எம்முன் வைக்கிறது.
அவர் கூறுவது, இந்த நாடுகளில் அறிவியல் கல்வி என்பது பொதுவாக மனப்பாடம் மற்றும் சித்திரவதையாகும், அதாவது மாணவர்கள் அறிவியலின் அடிப்படை கருத்துக்களை மனனம் செய்வதூடாக கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், மாணவர்கள் இந்தக் கருத்துக்களை உண்மையில் புரிந்து கொண்டு, அவற்றை தங்களது வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
வளரும் நாடுகளில், கல்வி முறைகள் மிகவும் தரப்படுத்தப்பட்டவை மற்றும் மனப்பாடம் (standardized and focused on memorization) செய்வதில் கவனம் செலுத்துகின்றன.
பெரும்பாலும் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக. அறிவியல் கற்பிக்கும் இந்த முறை, மாணவர்கள் பாடத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளவோ அல்லது நடைமுறை அடிப்படையில் அதன் பொருத்தத்தை கண்டு அனுபவிக்கவோ அனுமதிக்காது என்பது தான் உண்மை.
அறிவியல் கல்வி என்பது கருத்துக்களைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவை நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்வதையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.
உதாரணமாக, இயற்கை நிகழ்வுகள், அறிவியல் கோட்பாடுகள் மற்றும் புத்தாக்கங்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், இக் கல்வியானது மாணவர்களது தத்துவார்த்த அறிவை நிஜ உலக பயன்பாடுகளுடன் இணைக்க உதவும்.
எனவே, மனப்பாடம் செய்வதை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, அறிவியல் அறிவின் நடைமுறை பயன்பாடு மற்றும் நிஜ உலக தாக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், பாடத்தின் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
இதனால், கல்வி அமைப்புகளில் மனப்பாடத்திற்கு பதிலாக, கருத்துக்களையும் அவற்றின் சமூகத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் பயன்படுத்துவதன் மூலம், அறிவியல் கல்வியை திறமையானதாக மாற்ற முடியும்.
நாளாந்த வாழ்வோடு அறிவியலை தொடர்புபடுத்தி வேண்டுமாயின் உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கற்பிக்க வேண்டும். அங்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அறிவியல் தத்துவம் நடைமுறையில் பயன்படுத்தப் படவேண்டும். சூழலுக்கு தீங்கு விளைவிக்காது எதையும் செய்யவேண்டும் என்று மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும்.
பாடப்புத்தகத்தில் இருந்து உதாரணங்களை எடுத்து சொல்வதைவிட மாணவர்களுக்கு எவை சம்பந்தப்பட்டவையோ அவற்றை எடுத்துச் சொல்வதற்கு ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.
வளர்முக நாடுகளில் அறிவியல் கல்வி பற்றி பல அறிக்கைகள் தயாரித்து உலக வங்கிக்கு கொடுத்த "சில்வியா வேரி" என்பவர் குறிப்பிடும் போது "பின்னால் விஞ்ஞானிகள் ஆகப்போகின்றவர்கள் மட்டும் அறிவியல் கற்கவேண்டும் என்பது சரியல்ல, எல்லோருக்கும் அறிவியல் அறிவு வேண்டும் " என்கிறார். மேலும் அவர் குறிப்பிடும் போது,"பொது மக்கள் அறிவியலை நன்கு அறிந்து சிறப்பாக வரவேண்டும் என்றும், குடிநீர் வசதி தொழில் அபிவிருத்தி,நில அபிவிருத்தி போன்றவை பற்றி வளர்முக நாட்டில் உள்ளவர்கள் விபரமான அறிவோடு எடுத்துரைக்க கூடிய வல்லுநர்கள் ஆகவேண்டும்" என்று அவர் குறிப்பிடுகின்றார்.
அதாவது,பொதுமக்கள் அடிப்படை அறிவியலை பெற்றவர்களாக எல்லா நவீன முன்னேற்றங்களையும் பயன்படுத்தும் திறனுடையவர்கள் ஆக வேண்டும் என்பதே நாட்டின் இலட்சியமாக இருக்கவேண்டும்.
கழிவுப் பொருட்களைப் பிரித்துப் பயன்படக்கூடியவற்றைப் பயன்படுத்துவது, அழியக் கூடிய விலங்கினங்கள்,தாவர இனம் ஆகியவற்றை காப்பது,நீர் வளம் குறையாமல் பாதுகாப்பது,போன்ற நடவடிக்கைகள் மூலம் அறிவியல் கல்வி கொடுத்து மக்களைத் தங்கள் சமூகப் பொறுப்பை உணர செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பயனுள்ளதுமாகும்.
அதுமட்டுமன்றி,எமது நாடானது பாடத்திட்டத்தை புது முறைக்கு மாற்றினால் போதாது,தகுந்த ஆசிரியர்களை உருவாக்குவது மிகவும் அவசியம். ஆனால், இது எமது நாட்டில் மிகவும் கேள்விக்குரியது. பட்டதாரிகளால் பாடசாலைகள் நிரப்பப்படுகின்றனவே தவிர தகுந்த ஆசிரியர்களால் அல்ல (Schools are filled with graduates, not with qualified teachers.) சீர்திருத்தங்களை உள்வாங்க கூடிய வலுவில் அவர்கள் தயார்படுத்தப்படுவதில்லை. காலத்திற்கு காலம் தாக்கதிறனான பயிற்சி என்பது இங்கு மிகவும் கேள்விக்குரியதே.
ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு போதுமான முதலீட்டை செய்யவேண்டும். ஆசிரியர்களுக்கான கல்வி அளிக்கும் புதிய முறைகள்,கல்வி அளிக்கும் துணைக் கருவிகள்(Learning Aids) பற்றி நல்ல பயிற்சி அளிக்க வேண்டும்.இதன் மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியரை உருவாக்க முடியும்.இது மாணவனின் தரத்தை அளவிட்டு செயல்திறனுள்ள மாணவனாக்க இது உதவும்.
இதற்கு, அரசின் உறுதிப்பாடு,ஆசிரியரை தெரிவு செய்யும் முறை, அவர்களுக்கான பயிற்சி பட்டறைகள்,முதலீடு என்பன அவசியம்.
This is not a field where you can expect change overnight, but We have to start. (இது ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்கும் களம் அல்ல, ஆனால் ஆரம்பிக்க வேண்டும்.)
நா.இராஜமனோகரன்
29/03/2025
No comments:
Post a Comment