Wednesday, April 30, 2014

பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்...

தமிழர்  கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலநோக்களை உடைய கருத்துக்களை விபரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன. 

வன்முறையற்ற, பண்புபட்ட முறையில், கருத்துக்களையும் பேச்சு திறனையும் முன்வைத்து, சிக்கலான பிரச்சினைகளை அலச இவை உதவுகின்றன.

மிழுக்குச் சிறப்பு "'கரம் போன்றது, பேச்சுக் கலைக்குப் பட்டிமன்றம். இலக்கிய வழக்கில் 

இது "பட்டிமண்டபம்' எனக் குறிக்கப்பெறுகின்றது.



"பட்டிமன்றம்' என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்பராமாயணம் ஆகிய பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் இச்சொல் பெயரளவில் இடம்பெற்றுள்ளது.

மணிமேகலையில், "பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்' என வருகின்றது. எனவே பட்டிமண்டபத்துக்கு என்று ஏதோ ஒரு நெறிமுறை அல்லது விதி இருந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

திருவாசகத்தில், "பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே' எனக் குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர்.

இதனால் பட்டிமண்டபத்தில் ஏறுவதற்குத் தகுதி வேண்டும் என்பது புலனாகின்றது.

கம்பராமாயணத்தில், "பன்ன அரும் கலைதெரி பட்டி மண்டபம்' என இடம்பெற்றுள்ள குறிப்பு, அரிய கலைகளை ஆராய்வதற்கு உரிய இடம் பட்டிமண்டபம் என்பதை உணர்த்துகின்றது. இங்ஙனம் பட்டிமண்டபம் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களிலேயே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிமன்றம் தொடக்க காலத்தில்,

பட்டிமன்றத்தின்வளர்ச்சி1

*சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம் என்றாற்போல்  இலக்கியத்தைப் பொருளாகக் கொண்டு நடைபெற்றது.

பட்டிமன்றத்தின்வளர்ச்சி2

*பட்டிமன்றத் தின் அடுத்த செல்நெறி சமூகத்தைப் பற்றியதாக அமைந்தது;

பட்டிமன்றத்தின்வளர்ச்சி3

*பட்டிமன்றத்தின் மூன்றாம் பரிமாணமாக குடும்பம் அமைந்தது.
கணவனா?  மனைவியா?,  தாயா? தாரமா?, மகனா? மகளா?, பிறந்த வீடா, புகுந்த வீடா? என்றாற்போல் குடும்பங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களில் விவாதிக்கப் பெற்றன
.

பட்டிமன்றத்தின்வளர்ச்சி4

*பட்டிமன்றத்தின் நான்காம்கட்ட வளர்ச்சி சினிமாவை மையமிட்டு அமைந்தது. கண்ணதாசனா, பட்டுக்கோட்டையா? பழைய பாடலா? புதிய பாடலா? என்றாற்போல் சினிமா தொடர்பான செய்திகள் பட்டிமன்றங்களில் அலசப் பெற்றன.

பட்டிமன்றத்தின்வளர்ச்சி5

*பட்டிமன்ற வரலாற்றில் ஐந்தாம்கட்ட வளர்ச்சிப் போக்கு விழிப்புணர்வுச் சிந்தனை ஆகும். வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் துணைபுரிவது திறமையா, அதிர்ஷ்டமா?, வாழ்க்கைப் பயணத்தில் திருமணம் சறுக்குப் பாதையா, திருப்பு முனையா?, சாலவும் நன்று எது? ஆலயம் தொழுவதா, நூலகம் செல்வதா?, வாழ்க்கையின் வரம் நண்பர்களா, நூல்களா?, எதிர்காலம் என்ற பெயரில் பெற்றோர்கள் குழந்தைகளை வதைக்கிறார்களா? விதைக்கிறார்களா?, என்றாற் போல் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டக்கூடிய தலைப்புக்களில் பட்டிமன்றங்கள் அமைந்தன.
செய்தி/தகவல், பொழுதுபோக்கு என்றும் இரண்டும் சேர்ந்த ஆக பட்டிமன்றம் இக்காலகட்டத்தில் வளர்ந்தது.

பட்டிமன்றம் சில நேரங்களில் பாட்டுமன்றமாகவும் மாறிவிட்டது.

கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதுபோல் கடைக்கோடி மனிதனுக்கும் இதிகாசங்களின் மற்றும் தமிழ் இலக்கியங்களின் சுவையான செய்திகளைக் கொண்டுசேர்த்தது, மக்கள் இடையே நகைச்சுவை உணர்வை வளர்த்தது, விழிப்புணர்வை ஊட்டியது எனப் பட்டிமன்றங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பட்டிமன்றம் வளர்த்த தமிழ் என்பது பல்வேறு பரிமாணங்களில் விரிவாகவும் முழுமையாகவும் ஆராயத்தக்க ஒரு பொருள் ஆகும்.

பட்டிமன்றத்தின் பிறிதொரு வடிவம்வழக்காடு மன்றம்” ஆகும். பட்டிமன்றத்தில் இரண்டு அணிகள் இருக்கும்; அணிக்கு இருவர் அல்லது மூவர் எனப் பேச்சாளர்கள் இடம்பெறுவர். வழக்காடு மன்றத்திலோ வழக்குத் தொடுப்பவர் என ஒருவர், அதை மறுப்பவர் என இன்னொருவர் என இரு பேச்சாளர்களே இடம்பெறுவர்.

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பட்டிமன்றங்கள் இரவு நேரப் பல்கலைக்கழகங்கள் போல! அதனைக் கேட்க வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இலக்கிய இன்பம் பெறுவார்கள்! தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து சிரித்து மகிழ்வார்கள்!



குறிப்பு 1

கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண்டும்அறி யேனையே.

பதப்பொருள் :
ஏற்றினை - இடப வாகனத்தை உடைய நீ
கட்டறுத்து - பாசங்களை ஒழித்து
எனை ஆண்டு - என்னை அடிமை கொண்டு
எட்டினோடு இரண்டும் அறியேனை - எட்டினோடு இரண்டின் பொருளையறியாத என்னை,
நீறு இட்ட - திருநீற்றை அணிந்த
அன்பரொடு - உன்னடியாரோடு
யாவரும் - எல்லாரும்
கண்ணார காண - கண்ணாரக் காணும்படி
பட்டி மண்டபம் - இடமகன்ற உன் திருவோலக்க மண்டபத்தில்
ஏற்றினை - ஏறச் செய்தாய்.

விளக்கம் : நீறிட்ட அன்பர் சிவனடியாராவர், 'கண்ணாரக் காண' எனக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. எட்டு என்னும் எண் தமிழில் '' என்றும், 'இரண்டு' என்னும் எண், '' என்றும் எழுதப்படும். ஆகையால், அகர உகரங்களை, 'எட்டும் இரண்டும்' என்றார். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதைக் குறிப்பிடுவார், 'எட்டினோடிரண்டும் அறியேனையே' என்றார்.
இனி, 'எட்டினோடு இரண்டும்' என்றதற்குப் பத்து என்றும், அதாவது,  - உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு. , என்னும் எழுத்தையும் கல்லாதவர் என்ற பொருளும் உண்டு. 'பட்டி மன்றம்' என்றதற்கு வாதசபை என்றும் பொருள் கொண்டு, 'அறிவில்லாத என்னை அறிஞர் அவையிலே ஏறச் செய்தாய்' என்று கூறுதலும் ஒன்று.
இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர், ஒன்றுக்கும் பற்றாத சிறுமையுடைதாயிருந்தும் பெருமை பெறும் என்பது கூறப்பட்டது.

குறிப்பு 2

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்  

பதப்பொருள் :
மன்னவர்  தரு   திறை   அளக்கும்   மண்டபம் -   (மன்னர்மன்னனாகிய   அயோத்தி  வேந்தனுக்கு   அடங்கிய)     
சிற்றரசர்கள் செலுத்தும் கப்பத்தை எண்ணி  
அளவிடும் மண்டபங்களும்;   


அன்னம் மென்   நடையவர்   ஆடு   மண்டபம்     
அன்னம்  போன்றநடையையுடைய நடன மாதர்கள்  நடனம்   
ஆடும்    மண்டபங்களும்; 


உன்னரும்  அருமறை  ஓதும்  மண்டபம்   
நினைப்பதற்கும்அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர்  
ஓதும்    மண்டபங்களும்; 


பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் - சிறப்பித்துப்   பேசுவதற்கும்அரியனவான பல கலைகளையும்    
அறிஞர்கள்    ஆராயும்   பட்டிமண்டபங்களும் (அயோத்தி நகரெங்கும் இருந்தன).

அரசியல்   கடமைகள். கலைத் துறைப் பணிகள். 
 சமயத்  தொண்டு.அறிவு  நலம் வளர்க்கும் ஆய்வு 
ஆகப் பலவற்றுக்கும்   அயோத்தியில்வெவ்வேறு   
மண்டபங்கள்   இருந்தன   என்பது   
கவிஞர்   செய்தி. 



Sunday, April 13, 2014

புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்...

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடி பணியாதீர்கள்.

பார்வையை விரிவுபடுத்துங்கள் !


 

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று
அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனா ல் பின் மூவரும் முயற்சி எடுப் பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான்.
நான் இரண்டு சீப்புகள் புத்த மடால யத்திற்கு விற்றேன்
வியாபாரிகேட்டான். “எப்படி?”
புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்.

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்
வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”
வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்தமடால யத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்ஒரு பெரிய 
கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால்அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோச னையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கி னார்கள்
வியாபாரி அந்த மகனைப் பாராட் டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்ப னை செய்தேன்

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”

அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு
ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத்தூண்ட உதவும் என்றேன்”.

அந்த மடாலயத் தலைவர்என்ன நினைவுப் பரிசு தரலாம்?” என்று மடாலயத் தலைவர் கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். “அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும்” என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத் தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்.

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நி லைக்குத்தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.

ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படாவிட் டால் வேறெதற்காவது பயன் படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்தபிக் குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்புபயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சி யாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்கு களுக்குப் பயனில்லா விட்டா லும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனை யைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவ ர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசி யாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன்எடுத்துக்கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒருமுறை யோடு முடிகிற விற்பனை அல்ல . புத்த மடாலயத்திற்கு நன்கொ டைகள் தருகிறவர்கள்அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

ஒரு சூழ்நிலையை ஒரே நேர் கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங் களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமை யையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பல மட ங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய்புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.



எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமை யுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக் கூடும்.