Wednesday, September 4, 2013

எண்ணைப் போரின் அடுத்த குறி சிரியா...!

சிரியா பற்றிய குறிப்பு



சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் 
அமைந்துள்ள ஒரு நாடாகும். 
இது மேற்கில் லெபனானையும்,
தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும்,
கிழக்கில் ஈராக்கையும்,
 வடக்கே துருக்கியையும்எல்லையாகக் கொண்டுள்ளது. 
நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து 
மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. 
ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு 
முன்பு வரை காணலாம். 
இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் 
அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், 
மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும்,
10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 
1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 
1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.

வரலாற்றில் சிறியா இன்றைய லெபனான், 
இசுரேல்,பாலஸ்தீனம் போன்றவற்றையும்
யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் 
வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை 
நவீன சிரியாவின் ஏனைய பகுதிகளையும் 
கொண்டதாக கருத்தப்பட்டது. 
இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது.
1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர்
இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை 
கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் 
பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் 
தொடர்பான சர்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.

சிரியாவின் இன்றைய நிலை


வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக், லிபியா 
வரிசையில் அடுத்ததாக அமெரிக்க ராணுவத்தின் 
தலையீட்டால் தவிக்க இருப்பது சிரியா. இராக்கிலும், 
லிபியாவிலும் முன்வைக்கப்பட்ட அதே காரணங்களைத்தான் 
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான 
சில அரபு நாடுகளும் சிரியாமீது ராணுவத் தாக்குதலில்
 ஈடுபடுவதற்கும் காரணம் கூறுகிறார்கள்.

பொறுப்பற்ற ஆட்சி, 
பொதுமக்களை அழிப்பதற்காக ரசாயன 
ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மனிதாபிமானமில்லாத
 படுகொலைகள் என்று அதிபர் பஷார் அல் அஸாத் 
அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.

சிரியா பிரச்னையின் பின்னணி
ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல. 
எப்படி இராக்கின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து, 
அதற்கு முன்னோடியாக ஆப்கானிஸ்தானின்
 தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்
 சாக்கில் சவூதி அரேபியாவில் தங்கள் ராணுவ
 தளத்தை அமைத்துக் கொண்டார்களோ, 
அதேபோல அடுத்ததாக ஈரானைத் தாக்குவதற்காக
 இப்போது சிரியாமீது ராணுவப் படையெடுப்பு 
நடத்த முயற்சிக்கிறார்கள். லிபியாவில் தங்களது
 நோக்கம் நிறைவேறாத நிலையில் 
இப்போது சிரியா குறிவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவே!

சிரியாவில் உள்நாட்டுப் பிரச்னை 
இருந்தது என்னவோ உண்மை. அதை 
பயன்படுத்தி, சிரியாவிலுள்ள ஸன்னி 
முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரபு 
நாடுகள் ஆயுத உதவி செய்து, 
பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு 
எதிராகப் போராட்டத்தை முடுக்கி விட்டன.
 இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர்
 இந்தப் போராட்டத்தில் சிரியாவில் 
கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் 
அஸாத் ஆதரவு ராணுவத்திற்கும் இடையே 
நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான 
அப்பாவிப் பொதுமக்கள் மரணமடைந்தனர். 
இவர்கள் ராணுவத்தின் ரசாயன 
ஆயுதங்களால் தாக்கப்பட்டனர் என்பது
போராட்டக்காரர்கள் சார்பில் அவர்கள்
ஆதரவாளர்களான அரபு நாடுகள் மற்றும் 
அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதே
 போராட்டக்காரர்கள் என்பதும், தங்களது 
அரசுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ 
நடவடிக்கை எடுக்க அதன் மூலம் காரணம்
 ஏற்படுத்துகிறார்கள் என்பதும் பஷார் 
அல் அஸாத் தலைமையிலான அரசுத் 
தரப்பின் கூற்று. 
அதில் உண்மை இல்லாமல் இல்லை.

 கடந்த மே மாதம் ஐ.நா. சபையால் 
நியமிக்கப்பட்ட "கார்லாடெல் போன்ட்டே" குழுவின் 
விசாரணை அறிக்கை, போராளிகள்தான் 
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் 
தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, துருக்கி 
எல்லையில் கைது செய்யப்பட்ட 
போராட்டக்காரர்களிடமிருந்து  
2 கிலோ "சரின்' வாயு கைப்பற்றப்பட்டிருக்கிறது.

 இராக்கிலும் சதாம் ஹுசேன் அரசின் மீது 
இதேபோலக் குற்றம்சாட்டித்தான்  இராணுவ
 நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. 
சதாம் ஹுசேன் கொல்லப்பட்டதும், 
அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி 
மாற்றம் ஏற்பட்டது. குற்றச்சாட்டு பொய் 
என்பதை அமெரிக்காவே ஒத்துக் கொண்டது. 
அதேபோல, இப்போது சிரியாவிலும் 
ஒரு பொய்க்காரணம் கூறப்படுகிறது என்பது தெளிவு.

  கட்டார் மற்றும் அரேபிய நாடுகளின் 
நேரிடையான, மறைமுகமான ஆதரவுடனும், 
அமெரிக்காவின் ஆசியுடனும் போராளிகள் 
ஆயுதமும், பண உதவியும் வழங்கப்பட்டு 
அஸாத் அரசுக்கு எதிராகப் போராடத் 
தூண்டப்படுகிறார்கள். அவர்களை 
எதிர்கொள்ள ஈரான் அஸாதின் படைகளுக்கு 
உதவுகிறது. ரஷியா, சீனா ஆகிய நாடுகளின்
ஆதரவு, அஸாத் அரசுக்கு இருக்கிறது. இது
தான் சிரியா பிரச்னைக்குக் காரணம்.

 ஐ.நா. சபைத் தீர்மானம், போராட்டக்காரர்களுக்கு
 ஆயுத உதவி, கடைசியாக அமெரிக்காவின்
நேச நாட்டுப் படையின் நேரடி 
இராணுவத் தலையீடு - இவைதான் 
லிபியாவில் கடாபி அரசைப் பதவியிலிருந்து
 அகற்ற அமெரிக்கா கையாண்ட உத்தி. 
அதையேதான் சிரியாவிலும் நடைமுறைப்படுத்த 
நினைத்தது அமெரிக்கா. 
ஆனால், லிபியா அனுபவமும்,
 ரஷியா மற்றும் சீனாவின் எதிர்ப்பும், 
சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை 
ஆதரிக்க முடியாமல் ஐ.நா. சபையைத் தடுத்து விட்டது.

 
அமெரிக்காவுக்கு சிரியாவில் தலையிடுவதில் 
இன்னொரு தர்மசங்கடமும் இருக்கிறது. 
பஷார் அல் அஸாதின் அரசுக்கு எதிராகப்
 போராடும் ஸன்னி பிரிவு இஸ்லாமியப் 
போராளிகளில் பலர் அல்- கொய்தா 
ஆதரவாளர்கள் என்பதுதான் அது. 
போராளிகளுக்கு வலிமையான 
ஆயுதங்களை அளித்து பலப்படுத்தினால், 
அதுவே தங்களுக்கு எதிராகப்
 பயன்படுத்தப்பட்டு விடுமோ என்கிற 
அச்சம் அமெரிக்காவை பயமுறுத்துகிறது.

 அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் 
புரட்சியாளர்களுக்கு ஆதரவாகக் களம் 
இறங்கினால், அஸாத் அரசு உடனடியாக 
அடிபணிந்து விடப் போவதில்லை. மிகப்பெரிய
 போராட்டம் வெடித்து 1999 கோசோவோ 
பிரச்னைபோல, அக்கம்பக்கத்து நாடுகளுக்கு 
அகதிகள் ஆயிரக்கணக்கில் தஞ்சம் அடைய
 நேரிடும். ஈரான், சீனா, ரஷியா நாடுகளின் 
ஆதரவுடன் வியட்நாம் போல போர் நீளும். 
அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

அமெரிக்காவும் நட்பு நாடுகளும் 
ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் 
லிபியாவைப் போல சிரியாமீதும் இராணுவ 
நடவடிக்கையில் ஈடுபட்டால், அதுவே
 தவறான முன்னுதாரணமாகி உலகிலுள்ள 
ஏனைய நாடுகளுக்கும் ஏதாவது 
ஒரு காலகட்டத்தில் அச்சுறுத்தலாகக் கூடும்.

சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு 
காண அமெரிக்காவோ, ரஷியாவோ 
தயாராக இல்லை. காரணம், அன்னிய 
நாடுகளின் அக்கறை பக்கத்திலிருக்கும்
 ஈரானின் எண்ணெய் வளத்தின் 
மீதுதானே தவிர சிரிய நாட்டு 
மக்களின் நல்வாழ்வில் அல்ல.

உலக நாடுகளுக்கு ,உலக அமைதியில் 
அக்கறை இருக்குமேயானால், 
சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு 
காண வேண்டும் என்கிற தீர்மானத்தை 
ஐ.நா. சபையில் முன்மொழிந்து ஆதரவு 
திரட்டி நிறைவேற்ற வேண்டும்.
 நமக்கு அந்தக் கடமை உண்டு!