Tuesday, July 18, 2017

பெண்களுக்கு அருள் புரியும் ஆடி அமாவாசை...!


ஆடி அமாவாசை  பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. 

அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

விரதம் சரி… அது என்ன கதை? 

அழகாபுரி நாட்டு அரசன் .
கந்தலைராஜா பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, “உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்’ என்று கூறியது. 

அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, “உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்’ என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்… அரற்றினாள்… தவித்தாள்… தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். 

உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரச
ன் அழகேசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.


இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், “இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள். 

மகிழ்ந்த அம்பிகை, “ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்’ என சொல்லி மறைந்தாள்.

1 comment: