Monday, October 24, 2016

சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கையிருப்பு!


''சிரிப்பு இதன் சிறப்பை சீர்துாக்கிபார்ப்பதே நமது பொறுப்பு
மனம்கருப்பா வெளுப்பா என்பதைக்காட்டும் கண்ணாடி சிரிப்பு!
சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கையிருப்பு!
வேறு ஜீவராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்தச் சிரிப்பு!''
என்ற நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், சிரிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.


சிரிப்புஎன்பது இறைவன் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில்சிரிப்புஎன்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல.



பொதுவாக உயர் பதவிகளில் உள்ள சிலர் பிறர் மத்தியில் அதிகம் சிரிக்க மாட்டார்கள். அது தமது  கௌரவத்தை பாதிக்கும் எனப் பயப்படுவர். இவர்கள் சிரிக்காமலும், அதிகம் கதைக்காமலும் இருப்பதுதான் அழகு என்று எண்ணுகின்றனர். எனவே, இவர்கள் பிறருடன் அதிகம் கதைப்பதில்லை; கலகலப்பாக இருப்பதில்லை. சிரித்தாலும் பதிலுக்குச் சிரிக்கக் கூடப் பஞ்சப்படுவார்கள்.இது தமக்கு கௌரவத்தை தரும் என எண்ணுகின்றனர் ஆனால் மற்றவர்களின் பார்வையில் வேறு மாதிரியாகவும் கீழ் நிலையில் வைக்கவுமே தோன்றும்.

'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அனுபவம்  உண்மைதானே.


'சிரிப்பும் சந்தோஷமும் நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்தும்' என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். நகைச்சுவையில் எத்தனையோ பயன்கள் உண்டு. எனினும், 'நல்ல நகைச்சுவை சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கிவிடும்' என்பது சிறப்பு.

யோகாவில் 'நகைப்புக்கிரியை' என்று ஒருவித அற்புதக் கிரியை உண்டு. அத்துடன் 'சிரிப்புத் தியானம்' என்ற ஒருவகைத் தியானமும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
ஜப்பானில் 'சிரிக்கும் புத்தர்' என்ற ஒருவர் இருந்தார். அவரது உண்மையான பெயர் 'ஹோட்டேஅல்லது பு டாய்' (Hotei or Pu-Tai)என்பதாகும். அவர் எப்பொழுதும் வாய்திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படித் தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அவர் சிரிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். அதைப் பார்ப்பவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்..!


சிரிப்பின் பயன்கள் வாய் விட்டுச் சிரிப்பதன் மூலம், முகத்தில் பொலிவும், கண்களில் ஒளியும் கூடும். மேலும் கண்களில் சாந்தமும், தெளிவும் உண்டாகும். நுரையீரல்
முழுமையாக விரிந்து, பிராண சக்தியை முழுவதும் கிடைக்கச் செய்கிறது. இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்கிறது. வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறுகிறது. சிறுநீரக செயற்பாடும் நன்கு அமைகிறது. நரம்பு மண்டலமே ஒருவிதப் புத்துணர்ச்சியை பெறுகின்றது. தொண்டைப் பிரச்னைகள், வாய்வு தொந்தரவுகள், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து விடுபட முடிகிறது. சிரிக்கச் சிரிக்க மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், நன்கு துரிதமாகச் செல்கிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாய் கிடைக்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைவதுடன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது.  நகைச்சுவை உணர்வானது, மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்று விடும். அந்தக் காலங்களில், அரசர்கள் மன இறுக்கங்களுக்குள்ளாகி விடுவார்கள் என்பதால், அரசவையில் விதுாஷகன் என்னும் விகடகவிகள் தங்களது நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜநிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்தனர்.


சிரிப்பு, உற்சாகம், மலர்ச்சி, மகிழ்ச்சி, ஆளுமை போன்றவற்றை உள்ளடக்கியதே நகைச்சுவை உணர்வு ஆகும். நல்ல நகைச் சுவை உணர்வு கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான் என்கின்றனர் சமூகவியலார்.நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திருப்பேன் என்று மகாத்மா காந்தி கூறியுள்ள கருத்து இதனை மெய்ப்பிக்கிறது.

இறுக்கம் தளரும் 'Humour Therapy' என்று அழைக்கப்படும் சிரிப்பு மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க, 'Immunoglobulin A' என்ற நோய் எதிர்ப்பு
சக்தி அவசியம் தேவை. சிரிக்கும் போது உமிழ்நீரில் இதன் அளவு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. வலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சிரிக்கும் போது, உடலில் 'Endorphins' என்கிற இயற்கையான 'வலிகுறைப்பிகள்' உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்த நோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு என்பது நிரூபணமாகிஉள்ளது.


சிரிக்காத மனிதர் பற்றி கவிஞர் வைரமுத்து தன் கவிதையில் அழகாக சொல்லியிருக்கிறார்
சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்



இந்த குழந்தைகள் போல் அழகாக சிரியுங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை இது தரும்!

Friday, August 12, 2016

கோப்பியாய் மாறுங்கள்...!

"முடியலப்பா! என்னால முடியலஎன்று அலுத்துக் கொண்டாள் ஆசை மகள்.
என்னம்மா ஆச்சு?” என்றார் அப்பா ஆதரவான குரலில்.
வாழ்க்கைன்னாலே பிரச்னைகளும் போராட்டங்களும்தானா? ஒரு பிரச்னையை சமாளிச்சு முழி பிதுங்கி வெளில வர்றதுக்குள்ள இன்னொரு பிரச்னை கழுத்தைப் பிடிக்குது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அப்பா!”
சமையல் கலையில் கை தேர்ந்த அப்பா, தன் மகளை அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார். ஒரே மாதிரி பாத்திரங்கள் மூன்றில் நீர் நிரப்பி, மூன்றையும் அடுப்பின் மீது வைத்தார்.
அவளின் அலை பாயும் மனதைப் போலவே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்தில் சில உருளைக் கிழங்குகளைப் போட்டார். இரண்டாவது பாத்திரத்தில் ஒரு கோழி முட்டையைப் போட்டு வைத்தார். மூன்றாவது பாத்திரத்தில் அரைத்த காபிப் பொடியைப் போட்டார்.
மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவின் செய்கைகள் அவளைக் குழப்பினாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகி விட்டாள்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் கொதித்த பிறகு, அடுப்பை அணைத்து விட்டு, வெந்த உருளைக் கிழங்குகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துப் போட்டார். வேக வைத்த கோழி முட்டையைத் தனியாக எடுத்து வைத்தார். கோப்பியைஒரு கோப்பையில் ஊற்றி வைத்தார்.
பிறகு மெதுவாக மகளின் பக்கம் திரும்பி, ”இப்ப சொல்லுடா செல்லம்! இங்கே என்ன இருக்கு?”
என்னப்பா அறுக்கற, உருளைக் கிழங்கும், முட்டையும்கோப்பியும் இருக்கு
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ”இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு
தொட்டாள். வெந்த உருளைகள் மிருதுவாக இருந்தன. பிறகு முட்டையின் கடினமான மேல் ஓட்டினை உறிக்கச் சொன்னார். அதன் பின் கோப்பையில் இருந்த கோப்பியை குடிக்கச் சொன்னார். அந்தக் காபியின் நறுமணம் கொடுத்த புத்துணர்ச்சியில் லேசான புன்னகை தவழ்ந்தது அவள் முகத்தில்.
இதெல்லாம் என்னப்பா?” என்றாள் புன்னகை மாறாமல்.
மகளே! இன்னுமா புரியல? உருளை, முட்டைகோப்பி மூணுக்கும் ஒரே மாதிரி பிரச்சினைதான். கடினமா உறுதியா இருந்த உருளைக்கிழங்கு கொதிக்கிற தண்ணியில விழுந்த உடனே ரொம்ப மிருதுவா, பலவீனமா ஆயிருச்சி. முட்டையோட மேல் ஓடு அப்படியே இருந்தாலும் உள்ளுக்குள்ள  திரவமா இருந்த கரு கடினமா மாறிடுச்சி. ஆனா கோப்பி  மட்டும் ரொம்ப வித்தியாசமா எல்லாரும் பிரியப்படற ஒரு நிலைக்கு மாறிடுச்சி
எல்லாருக்கும்தான் பிரச்சினைகள் இருக்கு. ஆனா அந்தப் பிரச்சினைகளால நாம எப்படி பக்குவப்படறோம்கிறதுலதான் வித்தியாசமே இருக்கு
உருளைக்கிழங்கு மாதிரி பலவீனமா மாறி நம் நிலையை நாம் இழக்க வேண்டாம்
முட்டை கடினத்தன்மை அடைந்தது போல நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு விரக்தியில் இருக்கவும் வேண்டாம்
கோப்பியைப் போல நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டு  நம்மோடு பழகுபவர்களையும்  அனுசரித்து  எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி பிரச்சினைகளை சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்மா! ”
அவளுக்குப் புரிந்து விட்டது, இனி பிரச்னைகளை எப்படி எதிர் கொள்வதென!
உங்களுக்கும் புரிந்திருக்கும் தானே.....???