Friday, August 12, 2016

கோப்பியாய் மாறுங்கள்...!

"முடியலப்பா! என்னால முடியலஎன்று அலுத்துக் கொண்டாள் ஆசை மகள்.
என்னம்மா ஆச்சு?” என்றார் அப்பா ஆதரவான குரலில்.
வாழ்க்கைன்னாலே பிரச்னைகளும் போராட்டங்களும்தானா? ஒரு பிரச்னையை சமாளிச்சு முழி பிதுங்கி வெளில வர்றதுக்குள்ள இன்னொரு பிரச்னை கழுத்தைப் பிடிக்குது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு அப்பா!”
சமையல் கலையில் கை தேர்ந்த அப்பா, தன் மகளை அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார். ஒரே மாதிரி பாத்திரங்கள் மூன்றில் நீர் நிரப்பி, மூன்றையும் அடுப்பின் மீது வைத்தார்.
அவளின் அலை பாயும் மனதைப் போலவே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்தில் சில உருளைக் கிழங்குகளைப் போட்டார். இரண்டாவது பாத்திரத்தில் ஒரு கோழி முட்டையைப் போட்டு வைத்தார். மூன்றாவது பாத்திரத்தில் அரைத்த காபிப் பொடியைப் போட்டார்.
மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவின் செய்கைகள் அவளைக் குழப்பினாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகி விட்டாள்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் கொதித்த பிறகு, அடுப்பை அணைத்து விட்டு, வெந்த உருளைக் கிழங்குகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துப் போட்டார். வேக வைத்த கோழி முட்டையைத் தனியாக எடுத்து வைத்தார். கோப்பியைஒரு கோப்பையில் ஊற்றி வைத்தார்.
பிறகு மெதுவாக மகளின் பக்கம் திரும்பி, ”இப்ப சொல்லுடா செல்லம்! இங்கே என்ன இருக்கு?”
என்னப்பா அறுக்கற, உருளைக் கிழங்கும், முட்டையும்கோப்பியும் இருக்கு
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ”இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு
தொட்டாள். வெந்த உருளைகள் மிருதுவாக இருந்தன. பிறகு முட்டையின் கடினமான மேல் ஓட்டினை உறிக்கச் சொன்னார். அதன் பின் கோப்பையில் இருந்த கோப்பியை குடிக்கச் சொன்னார். அந்தக் காபியின் நறுமணம் கொடுத்த புத்துணர்ச்சியில் லேசான புன்னகை தவழ்ந்தது அவள் முகத்தில்.
இதெல்லாம் என்னப்பா?” என்றாள் புன்னகை மாறாமல்.
மகளே! இன்னுமா புரியல? உருளை, முட்டைகோப்பி மூணுக்கும் ஒரே மாதிரி பிரச்சினைதான். கடினமா உறுதியா இருந்த உருளைக்கிழங்கு கொதிக்கிற தண்ணியில விழுந்த உடனே ரொம்ப மிருதுவா, பலவீனமா ஆயிருச்சி. முட்டையோட மேல் ஓடு அப்படியே இருந்தாலும் உள்ளுக்குள்ள  திரவமா இருந்த கரு கடினமா மாறிடுச்சி. ஆனா கோப்பி  மட்டும் ரொம்ப வித்தியாசமா எல்லாரும் பிரியப்படற ஒரு நிலைக்கு மாறிடுச்சி
எல்லாருக்கும்தான் பிரச்சினைகள் இருக்கு. ஆனா அந்தப் பிரச்சினைகளால நாம எப்படி பக்குவப்படறோம்கிறதுலதான் வித்தியாசமே இருக்கு
உருளைக்கிழங்கு மாதிரி பலவீனமா மாறி நம் நிலையை நாம் இழக்க வேண்டாம்
முட்டை கடினத்தன்மை அடைந்தது போல நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு விரக்தியில் இருக்கவும் வேண்டாம்
கோப்பியைப் போல நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டு  நம்மோடு பழகுபவர்களையும்  அனுசரித்து  எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி பிரச்சினைகளை சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்மா! ”
அவளுக்குப் புரிந்து விட்டது, இனி பிரச்னைகளை எப்படி எதிர் கொள்வதென!
உங்களுக்கும் புரிந்திருக்கும் தானே.....???