Wednesday, December 25, 2013

சந்திர சேகர நாயகனே - தினம் அருள் தந்து காத்திடும் விநாயகனே !




தொகையறா
காலிங்கராஜன் குளத்தருகே அமர்ந்திருந்து
அருளாட்சி புரிகின்ற கணபதியே !
போற்றி ! போற்றி !
நல்லுரில் பின்னவன் வீற்றிருந்தருள !
விநாயகர் வீதியில் முன்னவன் நீ அருள !
துன்பங்கள் தீர்த்திடும் துதிக்கையை பற்றினோம்
தும்பி முகத்தானே துயர் களைவாய்
போற்றி ! போற்றி !

பாடல்
சந்திர சேகர  நாயகனே - தினம்
அருள் தந்து  காத்திடும்  விநாயகனே  !
கற் றோரும்  மற்றோரும்  துதிக்கின்ற
கருணா மூர்த்தி எம் விநாயகனே !
                     சந்திரசேகர நாயகனே…!

தேரேறி  ஊரெல்லாம்  வலம்  வந்தாய்
உனை  துதித்தவர்   ஊரெங்கும்  வலம்வந்தார் !
நிலையாக  நீ  யமர்ந்தாய்   கோவிலிலே
நிர்க்கதியாய்  நாம்  அலைந்தோம்   வீதியிலே !
                                                                சந்திரசேகர நாயகனே…!

இசையோடு தமிழ் கலந்து உனைப்பாடினோம் !
உணர்வோடு தினம் உந்தன் தலம்நாடினோம் !
வீடிழந்த வேளையிலும் உனைத் தேடினோம் !
வேதனையில் கரம் பற்ற உனைநாடினோம் !
                                                                சந்திரசேகர நாயகனே…!


வேலோடு தம்பி யுடன் வருவாயோ !
வேதனையை நீ களைந்துசுகம் தருவாயோ !
பாலோடும் ஊராக்கித் தரு வாயோ !
இரத்த மணமிழந்த மண்எமக்கு தருவாயோ !
                                                                சந்திரசேகர நாயகனே…!

பாலோடு  தேன்கலந்து தினம்பாடுவேன்-உந்தன்  !
ஓங்கார  முகம்காண  தினம் நாடுவேன்  !
ஔவையைதூக்கி  நீ  கைலையில்  வைத்தாய்  !
எங்களைதூக்கி  எம்  குடிசையில் வைப்பாய் !
                     சந்திரசேகர நாயகனே…!



[1998ம் ஆண்டு எனது பிறந்த மண்ணில் எழுந்தரருளி இருக்கும் “சந்திரசேரப் பிள்ளையா(ர்)”ரை நோக்கி என்னால் எழுதப்பட்டது.]


  சந்திரசேரப் பிள்ளையார்


நிர்க்கதியாய்  நாம்  அலைந்தோம்   வீதியிலே !
வீடிழந்த வேளையிலும் உனைத் தேடினோம் !