Tuesday, September 19, 2017

படி! படி!

மாணவர்களே!


  • பரீட்சையைப்போட்டு பெரிதாய் அலட்டிக் கொள்ளாதீர்கள். அமைதியாக, ஓய்வாய் இருங்கள்.
  • ஆறு முதல் எட்டு மணி நேரம் தினமும் தூங்குவது அவசியம். அப்படி உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுத்தால் மட்டுமே, நீங்கள் படிப்பதையெல்லாம், உங்களால் நினைவுபடுத்தி, தேர்வில் எழுத முடியும்
  • 5 முதல் 10 நிமிடங்கள் ஒவ்வொரு ஒரு மணி நேரம் ஒரு இடைவேளை எடுத்துக்க்கொள்ளுங்கள். நம் மூளையால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது. எனவே இடைவெளிகள் மிகவும் இன்றியமையாதவை.
  • எவ்வளவு படிக்கமுடியுமோ, அந்த அளவு மட்டுமே படியுங்கள். மிகவும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
  • கல்வியின் அதிமுக்கிய நோக்கம் என்னவென்றால், நீங்கள் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொள்வது தான். மதிப்பெண்கள் பெறுவது மட்டுமல். இந்த விஷயத்தை என் வாழ்வில், மிக தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன். இப்பொழுதாவது உணர்ந்து கொண்டேனே! எதுவும் தாமதம் கிடையாது அன்றோ!
  • உங்கள் நண்பர்களை எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அப்படி கேட்பது, தேர்வுக்கு முன் தேவையற்ற கவலை/பயத்திற்கு வழிவகுக்கும்.
  • நீங்கள் எடுக்கப்போகும் மதிப்பெண்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், படித்ததிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் நன்றாக புரிந்து படித்திருந்தால், மதிப்பெண்கள் தானாக வந்து தான் ஆக வேண்டும்.
  • கேள்வித்தாளைப் பார்த்தவுடன் பயந்துவிட வேண்டாம். உங்களால், கேள்விக்கு சம்மந்தப்பட்டு என்ன எழுத முடியுமோ, அதை எழுதுங்கள்.
  • தேர்வு அறையை விட்டு வெளியே வந்த பிறகு, பதில்களை பற்றி விவாதிக்க வேண்டாம், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்; அடுதது வரும் தேர்வுகளுக்கு நன்கு தயார் செய்ய முடியாமல் போகலாம்.

பெற்றோர்களுக்கு:

 மற்றவர்களுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட வேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர் தங்கள் சொந்த வழிகளில் திறமையானவர்கள். சிலரால் நன்றாக படிக்க முடியும்., சிலரால் நன்றாக விளையாட முடியும். சிலரால் நன்றாக பாடமுடியும்.சிலரால் நன்றாக ஆட முடியும். அனைத்து விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை ஆனால் ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது அல்லவா!
  • நன்றாக படிக்க அவர்களுக்கு உதவுங்கள். படி படி என்று சொல்லி மன அழுத்தம் கொடுக்காதீர்கள்.
  • ”நீ ஒன்றுக்கும் உதவாதவன்/ள்" என்றெல்லாம் சொல்லாதீர்கள். மாறாக, "உனக்கு திறமை உண்டு, இன்னும் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும், நிச்சயம் உன்னால் முடியும்” என்று ஊக்கம் கொடுங்கள்.
  • தேர்வுக்கு பிறகு, ஒரு வேளை உங்கள் குழந்தைகள், பதற்றமாக இருந்தால் அவர்கள் அருகில் இருந்து, “ஒன்றும் பெரிதாய் நீ இழக்கவில்லை, எதற்கும் கவலைப்படாதே. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என்று ஆறுதல் கூறுங்கள்.
  • குழந்தைகளுக்கு தற்கொலை/தற்காயப்படுத்தும் எண்ணங்கள், மனச்சோர்வு போன்றவை இருந்தால், அவர்களை தனியாக விட்டு செல்லாதீர்கள், மதிப்பெண்கள் என்பவை மட்டும் வாழ்க்கை இல்லை என்று புரிய வையுங்கள்.
நாம் அனைவருக்கும் தெரிய வேண்டிய உண்மைகள்: 
 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - ஒரு சராசரி மாணவர்.

  • ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் இணை நிறுவனர், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
  • சச்சின் டெண்டுல்கர் - தனது 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்
  • பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் தலைவர், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்.
  • தாமஸ் ஆல்வா எடிசன் - விஞ்ஞானி, பள்ளியிலிருந்து பாதியில் வெளிவேற்றப்பட்டவர்
  • வின்ஸ்டன் சர்ச்சில் - பிரிட்டன் முன்னாள் பிரதமர், எழுத்தாளர் மற்றும் ஓவியர், தனது படிப்பில் சராசரிக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்.

இந்த நபர்கள் இல்லை என்றால், நம் நிலைமை என்னவாக இருந்திருக்கும்??


"எடிசன் இல்லாமல் நம் வாழ்க்கை எப்போதும் இருண்டதாக இருந்திருக்கும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் இல்லை ஐ-போன்கள்.
பில் கேட்ஸ் இல்லாமல், கணிப்பொறி என்பது தூரத்து கனவாக இருந்திருக்கும்.
சச்சின் இல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாறு இல்லை" என பட்டியலில் நீள்கிறது.....



ஒப்பீட்டில் நல்லவள்...
நல்ல படிப்பவள்...
நல்ல அறிவாளி...
நல்ல திறமைசாலி...

இதில் எதுவும் வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை.

அது போன்று தான்...

மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல...

நீங்கள் நீங்களாக இருங்கள்...

Tuesday, August 8, 2017

உலக பழங்குடிகள் நாள் - 2017

2017 கருப்பொருள்(Theme):

பழங்குடி மக்கள் உரிமைகள் மீதான ஐ.நா.பிரகடனத்தின் 10 வது ஆண்டுவிழா..
(10th Anniversary of the UN Declaration on the Rights of Indigenous Peoples.)

உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டு ஆவணி (ஓகஸ்ட்) 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மார்கழி (டிஸ்சம்பர்)1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி(370 million) பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இத்தினம் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
உலகின் மொத்த ஏழைகளில் 15 வீதத்தினர் பழங்குடியினராக உள்ளனர் என, ஐ.நா. கூறியுள்ளது.
உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலான மொழிகள், பழங்குடியினத்தவரால் பேசப்படுகின்றன என்றும், இவர்கள் ஐந்தாயிரம் விதமான பலதரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஐ.நா. கூறியுள்ளது.
2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, ஐ.நா.பொது அவை, பழங்குடியினத்தவரின் உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிக்கையை உருவாக்கியது. இதன் பத்தாம் ஆண்டு நினைவு இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Tuesday, July 18, 2017

பெண்களுக்கு அருள் புரியும் ஆடி அமாவாசை...!


ஆடி அமாவாசை  பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. 

அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

விரதம் சரி… அது என்ன கதை? 

அழகாபுரி நாட்டு அரசன் .
கந்தலைராஜா பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, “உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்’ என்று கூறியது. 

அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, “உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்’ என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்… அரற்றினாள்… தவித்தாள்… தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். 

உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரச
ன் அழகேசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.


இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், “இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள். 

மகிழ்ந்த அம்பிகை, “ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்’ என சொல்லி மறைந்தாள்.

Thursday, June 1, 2017

நாம் அழுதது இதற்கல்ல...!

நாம் அழுதது இதற்கல்ல

...
எங்கள்
கண்ணீர்
இப்படியா கருக்கொள்ள வேண்டும்!
நாம் அழுதது...
நீதிக்காய்!
நிம்மதிக்காய்!
விடுதலைக்காய்!
பால் வேண்டி அழுத
பிள்ளையின் பசிக்காய்...
தாயின் படுகொலைக்காய்...
காணாமல் ஆன எங்கள் காளையர்க்காய்...
வெளிச் சொல்ல முடியாது கதறியழும் சகோதரிக்காய்...!
கார் முகிலே
கழன்று விடு...
நீதி இதுவல்ல
நிர்க்கதிதான் பதில் இல்லை...!
ரணம் கொண்ட
வலி தெரியும்!
உறவழிந்த
உணர்வு புரியும்!!
பசி கொண்ட பிஞ்சின்
கதறல் புரியும்!
வேண்டாம் விலகிடு...!
வற்றிவிடு...!
வசந்தம் கொடு...!
வாழ்விற்கு வழி சமை...!

நாம் அழுதது இதற்கல்ல...!!!