Tuesday, January 7, 2014

நெடுந்தீவுப் பயணமும்... பெருக்கு மரமும்...!



நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று

ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள்
இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது

நெடுந்தீவு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் 
பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது...




நெடுந்தீவு ஓடத்துறை


அவையாவன...

        தலைத் தீவு
        பசுத்தீவு
        பால்தீவு
        அபிசேகத் தீவு
        தயிர் தீவு 

யாழ்ப்பாணத்திலிருந்து  மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே

யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும்

ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. புங்குடுதீவில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர வடிவில் 30 கிமீ சுற்றளவையும், 48 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது என்பர்.

இது பெயருக்கு ஏற்றாற்போல் மிகப்பரந்த கடல்வெளியில் நீண்டு நெடியதாய் அமைந்திருக்கிறது

இலங்கையின் தீவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அந்தவகையில் நெடுந்தீவும் பல்வேறு தனித்துவங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது.அவற்றில் பெருக்கு மரமும் ஒன்று.நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் இந்தப் பெருக்கு மரம்.பலம் பொருந்திய யானைகள் ஒவ்வொரு திசையிலும் தம் துதிக்கைகளை நீட்டிக்கொண்டிருப்பதாய் விசாலமாகக் காட்சி தருகிறது.
ஆறேழு பேர் உள்ளே சென்று நிற்கக் கூடியளவுக்கு மரத்தினுள் குகைபோன்று காணப்படுகின்றது. உள்ளே தாராளமான இட வசதியும் உண்டு. எவ்வளவுதான் வெயில் வாட்டி வதைத்தாலும் உள்ளே சுகமான குளிர்ச்சி நிலவுகிறது.

இயற்கையின் அற்புதங்களில் ஒன்றான பெருக்கு மரம் குறித்த சில விடயங்கள்
பெருக்கு மரங்கள் வெப்ப மண்டலக் காடுகளில் வளர்கின்றன.
இவற்றை பாபப் (Baobab)என்ற பொதுப்பெயரால் அழைக்கின்றனர்.
இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மரங்களே காணப்படுகின்றன.

பெருக்கு மரத்தருகில் நானும் எனது நண்பர்களும்...!

இதன் அடி மரம் மிகவும் விசாலமானது.
இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன.
இதன் இலைகள் ஐந்தாகப் பிரிந்து மனித விரல்களைப் போல காட்சிதருகின்றன.
மனிதனின் ஐந்து முக்கியமான நோய்களை இந்த மரம் குணப்படுத்துவதற்கான குறியீடுதான் இது என்கிறார்கள் நெடுந்தீவு வாசிகள்.
1.குருதிப்பெருக்கம்
2.நரம்புத் தளர்ச்சி
            3.அம்மை
4.இரத்த அழுத்தம்
5.தொற்றுநோய்
ஆகியவற்றுக்கு பெருக்கு மரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள் போன்றவை பயன்படுகின்றன. சித்த மருத்துவத்தில் நோய் குணமாக்கும் மருந்துகளில் பெருக்கு மரம் பிரதான இடத்தை வகிக்கிறது.

பெருக்கு மரத்தின் உள்ளே , உள்ள மேல் பாகம்


அதிக வெப்ப காலங்களில் கூட இவை தளர்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் மண்ணுக்குள் விரிந்து பரந்த இவற்றின் வேர்கள் அதிகளவு தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்கின்றன. இதனால் வரட்சியான காலப்பகுதியில் கூட மரம் வாடுவதில்லை.தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவும் காலத்தில் நம் முன்னோர்கள் இந்த மரத்தின் வேர்களைப் பிழிந்து சாறெடுத்துக் குடித்துள்ளனர். அது அவர்களின் நோய்களைக் குணப்படுத்தியதுடன் நீண்ட ஆயுளையும் கொடுத்துள்ளது. 

பெருக்கு மரத்தரத்தின் உள்ளே நான்


போர்த்துக்கேய, ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களில் பெருக்கு மரத்தினுள் ஒளிந்திருந்து அவர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் நெடுந்தீவு மக்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பெருக்கு மரப் பழங்களிலுள்ள சாறு பலம் தரும் 
மதுபான வகையாகவும் பயன்படுத்தப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
பெருக்கு மரத்தின் பட்டைகள் உறுதியானவை. அவற்றை நாருரித்து 
ஆடைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.
நார் எடுப்பது பற்றித் தெரியும் ஆனால் ஆடையாகப் 
பயன்படுத்தப்பட்டது பற்றித் தெரியாது’ – இது கிராமத்தவர் ஒருவரின் கருத்து.
இச்செயற்பாடு அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம்.


நெடுந்தீவில் அதிகளவில் பெருக்கு மரங்கள் இருந்ததாகவும் 
ஒல்லாந்தர் காலத்தில் அவை அழிக்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.

பலம் என்றால் 

பெருக்கு மரம்போல் இரு’ என மூதாதையர்கள் அழுத்திக் கூறுவதுண்டு.

ஏன் இன்னும் கூட அப்படிச் சொல்வார்கள்.பெருக்குப் பட்டையில பட்டு செஞ்சி தந்தவரே….கருக்கலுக்கு வந்து கட்டிவிட்டுப் போனாலென்ன?..’ என நாட்டுப்புறப் பாடலொன்று உண்டு.

பெருக்குப் பட்டையிலிருந்து பட்டு செய்து தந்தவரே அந்தி மங்கும் நேரத்தில் வந்து அதைக் கட்டிவிட்டுப்போனாலென்ன?’ எனப் பாடுகிறாள் காதலி.
காதல் கொண்ட பெண் காதலனை நோக்கி அன்போடு பாடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. 

பெருக்கு மரம் ஆடைசெய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இந்தப்பாடல் உதாரணமாக அமைகிறது.

சுமார் 300 வருடகாலம் பழைமையான இந்தப் பெருக்கு மரத்தைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.

இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான
மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும்
இதுதான்.

 நெடுந்தீவுப் பெருக்கு மரம்



தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி
முனையில் உள்ளது.


மன்னார் பெருக்கு மரம்

No comments:

Post a Comment