Monday, July 2, 2018

கரோஷி (カロシ)என்றால் என்ன?

ஜப்பானில் அதிக பணிச்சுமை காரணமாக 
பணிபுரியும் இடங்களில் ஏற்படும் மரணங்களைக் 
குறிப்பதற்கு இச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

ஜப்பானைப் பொறுத்தவரை பணியாற்றுவது என்றால் 
காலை எட்டு மணி முதல் நான்கு மணி வரை வேலை 
செய்வது அல்ல. உறக்கம் கலைவதற்கு முன்பே 
அதிகாலை எழுந்து அலுவலகத்துக்கோ 
தொழிற்சாலைக்கோ சென்று விட வேண்டும். 
உணவு இடைவேளை என்பது பெயரளவுக்குதான். 
ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கைக்குத் 
திரும்பிவிட வேண்டும். ஏற்கெனவே குவிந்திருக்கும் 
வேலைகளை செய்து முடிப்பதற்குள் புதிய சுமைகளை 
ஏற்றிக்கொண்டே போவார்கள். ஒவ்வொன்றுக்கும் 
காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குடும்பம், 
வீடு குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு 
24 மணி நேரமும் வேலையைப் பற்றி மட்டுமே 
சிந்தித்து, வேலையை மட்டுமே செய்துகொண்டு 
வாழ்ந்தால்தான் சம்பளம் வரும். இல்லாவிட்டால் 
சம்பளம் பறிபோவதோடு ஏச்சு, பேச்சுகளுக்கு 
அவமானங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜப்பானில் 
பணிச்சுமை காரணமாக இன்னமும் மாரடைப்பால் 
மரணம் அடைவதுடன், சிலருக்கு மன அழுத்தமும், 
சிலர் அமைதியாகத் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

வேலைச்சுமை தாளாமல் பெருகும் ‘கரோஷி’ 
கொலைகளை ஜப்பான் அரசாங்கம் நன்கு 
உணர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, 
ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் தீராத 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், 
அவர் அநேகமாக இறந்து விடுவார் 
என்பதையும் அரசு அறிந்தே இருக்கிறது. 


கரோஷியை முன்வைத்து பல்வேறு ஆய்வுகள் 
புள்ளிவிவரங்களுடன் வெளி வருவதையும்கூட 
அவர்கள் கவனித்துக்கொண்டுதான் 
இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, 
டிசம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரை நடத்தப்பட்ட 
கணக்கெடுப்பின்படி 22 சதவிகிதத்துக்கும் 
அதிகமாக தனியார் நிறுவனங்கள் மாதத்துக்கு
80 மணி நேரம்வரை ஓவர்டைம் செய்யுமாறு 
தங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது 
தெரிய வந்துள்ளது.அடங்க மறுக்கும் பசியுடன் 
கரோஷி ஜப்பானைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. 

2015 கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்சுரி என்னும் 24 
வயது பெண் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை
செய்து கொண்டார். மாதம் 100 மணி
நேரத்துக்கு மேல் மேலதிக வேலை(Overtime) 
செய்யுமாறு அவர் பணியாற்றிவந்த விளம்பர 
நிறுவனம் கட்டாயப்படுத்தியதால் மட்சுரிக்கு 
அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சில மணி நேர 
உறக்கத்துக்காக இறுதிவரை மட்சுரி ஏங்கித் 
தவித்திருப்பது தெரியவருகிறது.
ஓவர்டைம் என்றும் பெயருக்குதானே ஒழிய, 
பெரும்பாலான நிறுவனங்கள் அதற்காக கூடுதல்
ஊதியம் எதையும் அளிப்பதில்லை. ஆரம்பத்தில் 
ஒப்புக் கொண்ட சம்பளப் பணத்தை மட்டுமே 
அவை வழங்குகின்றன. ஆனால் ஒப்புக்கொண்ட 
பணி நேரத்தைவிட இருமடங்கு நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. 

ஊழியர்களிடமிருந்து முடிந்தவரை உழைப்பைக் 
கசக்கிப் பிழிந்துகொள்ள வேண்டும் என்னும் 
வெறியுடன் செயற்கையாக வேலை நெருக்கடியை 
அவ்வப்போது உருவாக்கி, அசாதாரணமாக 
காலக்கெடுவை விதித்து ஊழியர்களை 
மனஅழுத்தத்துக்கும் தற்கொலைக்கும் 
தள்ளிவிடுகின்றன. ஊழியர்களின் உடல், 
மனம் இரண்டும் பாதிப்படையும் என்பது 
தெரிந்திருந்தும், கரோஷி மரணங்கள் 
அதிகரித்து வருவதைக் கண்ணால் கண்ட 
பிறகும் இந்நிறுவனங்கள் தங்களைச் சிறிதும் 
மாற்றிக் கொள்ளத் தயாராகயில்லை.
காரணம், இலாபவெறி, இதற்கு ஜப்பான் அரசின் 
அங்கீகாரமும் உண்டு. 

ஒவ்வொருமுறை கரோஷி நிகழும் போதும் 
முணுமுணுப்புகளும் எப்போதேனும் 
எதிர்ப்புகளும் கிளம்பும் என்றாலும் 
இவற்றால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது 
என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. 
ஆம், தொழிலாளர் நலன்சார் சட்டதிட்டங்கள் 
இருக்கத்தான் செய்கின்றன. வேலை நேரம், 
விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற 
அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் 
இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் 
அவையெல்லாமே காகிதத்தில் மட்டுமே 
சிறைபட்டுக் கிடக்கின்றன.எடுத்துக்காட்டுக்கு, 

சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் 
ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை 
அரசு கொண்டுவந்தது. ஆனால், 
இதையும் நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை. 

அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி 
நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் 
கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய 
விதிமீறல்களை ஒவ்வொரு முறையும் 
கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறது அரசு. 
அந்த வகையில், அதிகரிக்கும் கரோஷி 
கொலைகளுக்குக் காரணம் தனியார் 
நிறுவனங்கள் மட்டுமல்ல, ஜப்பான் அரசும் தான்.
இலாபம். இந்த ஒன்றுக்காகத்தான் ஜப்பானிய
ஊழியர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். 
இலாபத்தைப் பெருக்குவதற்காக எதையும் செய்யத் 

தயாராக இருக்கின்றனர், முதலாளிகள். 
தனியார்களைப்  பாதுகாக்க எதையும் செய்ய 
(அல்லது செய்யாமல் இருக்க) தயாராக இருக்கிறது அரசு.

அரசு என்பதே முதலாளித்துவத்தின் அடியாள் படையல்லவா?

கரோஷி என்பது வேண்டுமானால் ஜப்பானியச் 
சொல்லாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் 
நடக்கும் எல்லாமே மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக் 
கொண்டிருப்பவைதாம். தொழிலாளர்களின் 
உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி 

ஒடுக்குவதிலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு 
இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. 
அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் 
பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள 
தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

Thursday, January 25, 2018

சொல் முருகா!

நீ நின்ற இடமெல்லாம்
   நிறைவு தான்-என் முருகா!

நீ தந்த தமிழெங்கும்
   சிறப்புத் தான்-என் முருகா!

நீ கூட இருக்கையிலே
  பய மில்லை-என் முருகா!

நீ மயிலேறி வருகையிலே
  வனப்புத் தான்-என் முருகா!

நீ வந்து தேர் ஏற
  ஊர் சிலிர்க்கும்-என் முருகா!

நீ சுற்றும் இடமெல்லாம்
  மணம் கமிழும்-என் முருகா!
          
ஆனாலும்!
நீ இன்றி இவ்வுலகில்

  யார் எனக்கு-சொல் முருகா!