Friday, October 6, 2023

 சிறுவர் தினத்து பரிசாய் வேண்டும்..!



பாட்டி சொன்னா கூடி இருந்து கூழ் குடித்ததை!
பாட்டா சொன்னார் தோளில் சுமந்து கோயில் சென்றதை!
அடுத்த வீட்டு அன்ரியும் சொன்னா அப்படியெல்லாம் நடந்திருப்பதை!
அதிசயத்தோடு நானும் கேட்டேன் அலாவுதீனின் அற்புத கதை போல்!
முகத்தைப் பார்த்து கதைக்க இங்க முதுகுத்தண்டு விடுகுது இல்ல.
முகத்தை கொஞ்சம் மேலே தூக்க கருந்துளை போல கவருது 'போன்' தான்!
எம்மை!,
வீட்டில் தூக்கி ஸ்கூட்டியில் வைத்தால் பள்ளிக்கூடத்தில் கொண்டே பறிப்பு!
பள்ளிக்கூடத்தில் தூக்கி வைத்தால் டியூஷன் வகுப்பில் மீண்டும் பறிப்பு!
வாழ்க்கை ஒரு வட்டம் ஒன்று வாத்தியார் சொல்ல கேள்விப்பட்டன்!
இரண்டு புள்ளிக்குள் ஒடுங்கி இங்க இரண்டறக் கலந்தது எமது வாழ்க்கை!
ஓடி விளையாட நேரமில்லை கூடிக் கதைக்க ஆளும் இல்லை!
அம்மா அப்பா கூட கதைக்க,
அவைக்கு கூட நேரமில்லை!
100 மார்க்கை எட்டிப்பிடிக்க அம்மா ஸ்கூட்டியில் என்னைத் துரத்த!
அப்பா போனில் அடிக்கடி துரத்த!
வகுப்பு டீச்சர் வார்த்தையால் துரத்த!
சிறுவர் பருவத்தை சிதறவிட்டு
ஆடி காற்றில் அறுந்த பட்டமாய் அங்க இங்க அலையுது வாழ்க்கை!
சிறுவர் உலகை புரிய எவற்கும்
சிறுவர் தினம் போதவே போதா!
எமக்கு!
நேரம் இருக்கிற அப்பா வேணும்!
புள்ளியைத் துரத்தா அம்மா வேணும்!
அன்பைக் கொடுக்கும் ஆசான் வேணும்!
வீட்டில் பாட்டி இருக்க வேணும்!
பாட்டா கூட வாழ வேணும்!-எமக்கும்
கூடியிருந்து கூழ் குடிக்கும் காலம் ஒன்று கூடி வரோணும்!
கூடியிருக்கும் குடும்பம் வேணும்!
குதுகலிக்கும் இல்லம் வேணும்!
ஓடிவிளையாட மாலை வேணும்!
இவை தான் எமக்கு,
சிறுவர் தினத்துப் பரிசாய் வேணும்!!
பரிசாய் இதுவே எமக்கு வேணும்!!

நா.இராஜமனோகரன்
01Oct 2023

No comments:

Post a Comment