உலகலாவிய இரத்தம் பகிர்தல் (“blood-sharing”) என்ற போதை முறைமையும்,இலங்கையின் அதன் நிலையும்..!
“Sharing blood is not sharing love, it’s sharing death.”போதைப் பழக்கங்களில் வினோதமான மற்றும் ஆபத்தான வழிகளில் ஒன்றாக இன்று காணப்படும் புதிய வழிமுறையாக “இரத்தம் பகிர்தல்” (blood-sharing) என்ற முறைமை காணப்படுகிறது.
இந்த முறைமையில், போதைவஸ்து பயன்படுத்திய நபரின் இரத்தத்தை, இக்குழுவில் அல்லது பிற நபருக்கு உடனடியாக மாற்றிக் கொடுத்து, அதனூடாக போதை உணர்வு பெற முயற்சிப்பதை இது குறிக்கிறது.
இது அதிகமாக ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. இதனை "ப்ளூடூத்திங்" (bluetoothing)அல்லது "ஹாட்-ஸ்பாட்டிங்" (Hot spotting) என சில ஊடகங்களால் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இதனை “blood-sharing”, “blood-swapping" அல்லது ஆய்வுகளில் காணப்படும் பெயரால் "flashblood" என்றும் குறிப்பிடப்படும்.
முதலில் போதை எடுத்தவரின் இரத்தத்தில் இயல்பாக போதை சார்ந்த இரசாயனங்கள் அல்லது ஊசியில் ஏற்றப்பட்ட பொருள் இருந்து கொண்டிருப்பதால், அவரின் இரத்தத்தை வேறு ஒருவருக்குள் செலுத்துகையில் அதில் உள்ள போதை ஏற்றப்பட்டவருக்கு உடனடி போதை உணர்வை அது ஏற்படுத்தும்.
முதலில் ஒரு நபர் (போதை நுகருநர்) முன்னர் எடுத்துள்ள போதை பொருள் அல்லது ஊசி மூலம் (intravenous) தனது இரத்தில் போதை சார்ந்த பொருளை எடுத்திருப்பார்.சிறிது நேரம் கழித்து, அவரது இரத்தத்தில் இருந்து சில மில்லி லிட்டர்கள் ஊசி மூலம் எடுத்து அந்த இரத்தத்தை மற்ற நபருக்கு அல்லது பலருக்கு ஏற்றுவதன் மூலம் போதையை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு பகிரப்பட்ட இரத்தம் உடனடியாக அல்லது தாமதமாக போதை உணர்வை ஏற்படுத்தலாம், என்று சில செய்திகள் அல்லது ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.இதன் மூலம் பணம் மிச்சமாகிறது, குழுவாக பலர் பயன்படுத்தலாம் என்ற நோக்கமே இந்த செயல் நிலைக்கு காரணம் ஆகின்றது.
இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், இரத்தம் என்பது மிக உயர்ந்த தொற்று நோய்களை பரப்பும் கருவியாகும்.இதன் மூலம் HIV/AIDS, Hepatitis B, Hepatitis C போன்றவை நேரடியாக அல்லது அதிக அளவில் பரவ வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரத்தம் மூலம் HIV தொற்று ஏற்படும் வாய்ப்பு 90 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
சாதாரண syringe sharingஐ விட இத்தகைய “இரத்தம் நேரடியாக பகிர்தல்” மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இங்கு, இரத்தம் நேரடியாக பகிர்தல் என்பது, சில போதைப்பொருள் பயன் நுகருநர் போதையின் "வலுவான தாக்கத்தை" (strong effect) பெற, மற்றொருவரின் இரத்தத்தை சிறிதளவு போதைப் பொருளில் கலந்து ஊசி வழியாக செலுத்துவார்கள்.இதை சில இடங்களில் "blood mixing" அல்லது"flashblood"என்று அழைக்கின்றனர்.
சமூகத்தில் இவ்வளவு ஆபத்தான பழக்கம் விரிவடைந்தால், பொதுச் சுகாதார சிக்கல்கள் நாட்டில் மேலும் பெருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, போதை பொருள் மற்றும் ஊசி சுத்தம், பகிர்தல் தொடர்பான கட்டுப்பாடு இல்லாத நாடுகளில் அதிகமான இந்த செயல்கள் விரிவடைந்து வருவதாக செய்திகள் வெளியான உள்ளன. உதாரணமாக பசிபிக் தீவுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம்.
சில நாடுகளில்,உதாரணமாக Fiji,தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், லெசோத்தோ, தான்சானியா போன்ற நாடுகளில் இந்த புதிய “போதைப் போக்கு” (trend) அறிமுகமாகியுள்ளதாகவும், அதனால் HIV பரவலுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலை அதிகப்படியான போதைப் பயன்பாடு, சமூகவியல் அழுத்தம்,வசதி குறைவு போன்ற காரணங்களால் உருவாகுகிறது.
ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருவதாவது, இரத்தம் பகிர்தல் வழியாக HIV பரவலின் இருப்பு மற்றும் அதன் கண்காணிப்பு தொடர்பாக பல சவால்களை இந்த நாடுகள் எதிர்நோக்க வேண்டி உள்ளது என்பதையே.
எனவே,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதுடன் “இரத்தம் பகிர்தல் = மிக உயர்ந்த அபாயம்” என்பது மக்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
போதை பழக்கத்தைக் குறைக்க தீர்மானமான நடவடிக்கைகள் (harm reduction) வேண்டியது மிக அவசியம். தெளிவான போதை ஒழிப்புக் கொள்கைகள், ஊசி பகிர்தல் தடுப்பு, மாற்று சிகிச்சைகள் என்பன தொடர்பில் நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
இரத்த பரிமாற்றம் (transfusion) மற்றும் போதை சார்ந்த இரத்த செயல்முறைகள் (non-medical blood sharing) ஆகியவற்றில் வேறுபாடுகளை உள்ளடக்கி கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
இது தொடர்பில் ஆராய்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு “இரத்தம் பகிர்தல்” என்ற செயல்திறன் எந்த அளவுக்கு உள்ளதென இலக்குகள், தரவுகள், பரவல் நிலை ஆகியவை தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையில் HIV பரவல் தன்மையில் “குறைந்த அளவிலான தொற்றுநோய்” (low-level epidemic) என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 15-49 வயது பிரிவினர் இடையே HIV பரவல்
<0.1வீதம் என கருதப்படுகிறது.
2011-ஆம் ஆண்டில் தகவல்களின் படி, இலங்கையில் இரத்த மூலமான மற்றும் ஊசி வழியாக HIV தொற்றின் சான்றுகள் குறைவாக உள்ளதாக அறியக் கிடைக்கிறது.“2008–09 ஆண்டுகளில் நாட்டில் இரத்தம் அல்லது இரத்தப் பொருட்கள் மூலம் தொற்று ஏற்பட்ட விவரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.”
மேலும், இலங்கை இது தொடர்பில் “முக்கியமான மக்களிடையே” (key populations) படிப்படியாக தனது கவனத்தை செலுத்தி வருகிறது. உதாரணமாக, “Beach boys” என அழைக்கப்படும் கடற்கரையில் சுற்றுலாப் பணி செய்யும் துணை நபர்கள் இடையிலும் சில HIV அபாய பண்புகள் (sexual risk behaviours) இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கிடைக்கப் பெறுகின்ற அடிப்படையான இலங்கை ஆய்வுகளில் “இரத்தம் பகிர்தல்" (blood-sharing) என்ற செயல்முறை (blood sharing among drug injectors) பற்றிய தரவுகள் குறைவாக அல்லது வெளிப்படையாக இல்லை என்றே கூறலாம்.
இருப்பினும், Intravenous Drug Use / User (IVDU)ன் போது ஊசி மூலம் பகிர்தல் என்ற தகவல்கள் சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
அதன்படி, இத்தகைய “இரத்தம் பகிர்த்தல்” போன்ற செயல் இலங்கையில் பொதுவாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது இல்லை என்றும், அதனால் நாட்டில் இது விசாலமாக பரவியிருப்பதாக எந்த சான்றுகளும் காணப்படவில்லை என்பதும் தெரிகிறது.
எனினும், புதிதாக உருவாகும் இவ்வாறான செயல்முறைகள் குறித்து பதிவு செய்யப்படாமையால் “ அபாயம் இல்லை” என்று முழுமையாக கூற முடியாது.
குறைந்த தகவல் அறிக்கை (under-reporting) மற்றும் குறைந்த கண்காணிப்பு, போதை நுகருநர்கள் (people who inject drugs = PWID) போன்ற வகுதியினரை கண்காணிக்கும் தரவுகள் நம்மிடம் குறைவாகவே உள்ளன.
“இரத்தம் பகிர்தல்” எனும் புதிய வடிவமைப்பில் போதைச் செயல்பாடுகள் இருப்பதால், அதற்கான ஆய்வுகள், தரவுகள், நடத்தை ஆய்வுகள்(behavioural surveys) தொடர்பில் இன்னும் முழுமையான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கை மருத்துவ மற்றும் பொது சுகாதார அமைப்புகள், உதாரணமாக National STD/AIDS Control Programme போன்றவை இரத்தம் பகிர்தல் (blood-sharing) என்ற புதிய நடத்தை (new behaviour) பற்றிய தரமான கற்றல் (qualitative study) மற்றும் பரவல் பரிசோதனை,உயிரியல் நடத்தை ஆய்வு(bio-behavioural survey) என்பவற்றை மேற்கொள்ள வேண்டும்.
போதை நுகருநர்களுக்கு (PWID) இடையேயான ஊசி மூலம் பகிர்தல் மற்றும் “இரத்தம் நேரடியாக பகிர்தல்” போன்ற நிலைகளை கண்காணிக்கும் தகவல் தளங்கள் அல்லது பதிவு முறைமைகள் உருவாக்கப்பட வேண்டியது முக்கியம்.
சமூக விழிப்புணர்வு முறைமைகள் என்ற அடிப்படையில் “இரத்தம் பகிர்தல் என்பது மிக உயர்ந்த அபாயம்” என்பதை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொருவரினதும் கடப்பாடாகும்.போதைப் பழக்கம் இருப்பதே மிக ஆபத்தானது, அதனுடன் "இரத்தம் பகிர்தல்" போன்ற நடைமுறைகள் இணைந்தால் தனியாருக்கும் சமுதாயத்திற்குமான பாதிப்பு மிகவும் அதிகமாகும். எனவே "இங்கு எதுவும் நடக்காது" என்று ஆறப்போடுவது மிகவும் தவறு. விழிப்புணர்வு, தடுப்பு, உடனடி சிகிச்சை என்பன இதனை தடுக்கும் வழிமுறைகளாகும்.
“When blood becomes the drug, humanity begins to fade.”
நா.இராஜமனோகரன்
11 November 2025

No comments:
Post a Comment