போதை...பேரரசின் பேராசை!
“You may lose a battle, but never lose the reason you fight.”
ஒரு தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் மண்ணில் முளைவிடும் தலைமுறைகளின் மனநிலையால் தீர்மானிக்கப்படுகிறது. போர்க்களத்தில் பீரங்கிகள் முழங்கி, பல உயிர்களின் குருதிச் சகதியில் ஒரு நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றலாம். ஆனால், ஒரு நாட்டின் அறிவையும், ஆன்மாவையும், எதிர்காலத்தையும் அழிக்க, குண்டுகள் தேவையில்லை. போதையே போதும் என்பதை, வரலாறு நமக்கு ஏற்கனவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
அதன் மிகத் தெளிவான உதாரணம் பிரித்தானிய பேரரசு. உலகம் முழுவதும் “சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம்” என பெருமைப்பட்ட இங்கிலாந்து, தன் பேராசைக்காக இரு மாபெரும் நாகரிகங்களை ,இந்தியாவையும் சீனாவையும் ,வேறு வேறு விதமாக உலுக்கியது. சீனாவை அபின் என்ற விஷத்தால் மயக்கி சீரழித்தது,அந்த விஷத்தை விளைவிக்க, இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி தங்கள் வளமான நிலங்களில் உணவுக்கு பதிலாக போதைப் பயிரை வளர்க்க கட்டாயப்படுத்தி திணித்தது.
வரலாற்றில் இந்தக் கொடூரமான உத்தியை மிகத் துல்லியமாக, மிக மிகக் கொடூரமாக அரங்கேற்றியது பிரித்தானிய பேரரசு.
"பிரித்தானி சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைந்தே இல்லை" என பிரித்தானிய ஆர்பரித்தது தொடர்பில், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தெரிந்த கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது "பிரித்தானியர்களை இருட்டில் விட இறைவனுக்கே பயம்" என்பதே அது.
பெர்னார்ட் ஷா பிரித்தானிய பேரரசின் ஆணவத்தையும் பேராசையையும் நையாண்டி செய்த கூற்று அது.அதன் ஆழமான பொருள், பிரித்தானியர்கள் எங்கு சென்றாலும் ஆக்கிரமிப்பு, இலாப நோக்கம், சுரண்டல், கலாசார அழிப்பு போன்ற மாற்றங்களை ஏற்படுத்தினர்.அவர்கள் இருக்கும் இடம் முழுவதும் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றிகளாய் செயல்படுட்டார்கள்.
அத்தகைய பிரித்தானியார்களை "இருட்டில்" (அதாவது தனது கட்டுப்பாட்டிற்கு வெளியே) விடுதல் இறைவனுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவர்கள் என்பதே அவரின் நையாண்டி ஆகும்.இதுவே பெர்னார்ட் ஷாவின் மேற்கோளின் கசப்பான உண்மையும் கூட. இப்படிப்பட்ட பிரித்தானியாவின் இந்த கொடூர நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது சீனா.அதனை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அபின் (Opium). அந்த ஆயுதம் விளைவிக்கப்பட்ட இடம் இந்தியா.
இன்று நாம் பார்க்கும் வரலாறு, சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானம்’ (Century of Humiliation) பற்றியும், அதில் இந்தியாவின் இரத்தமும், இந்தியத் தொழிலதிபர்களின் (டாட்டா உட்பட) மறைக்கப்பட்ட பங்கும் பற்றிய ஒரு கசப்பான வரலாற்றைத்தான்.18-ம் நூற்றாண்டில், சீனா உலகப் பொருளாதாரத்தின் ஒரு தனித்தீவு போல இருந்தது. சீனப் பேரரசர்கள், "எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களிடமே உள்ளன. காட்டு மிராண்டிகளான வெளிநாட்டவர்களிடம் இருந்து எங்களுக்கு எதுவும் தேவையில்லை" என்ற கர்வத்துடன் தங்கள் வணிகக் கதவுகளை மூடி வைத்திருந்தனர். ஆனால், பிரித்தானியாவுக்கு சீனா அவசியமானதாக இருந்தது காரணம், தேயிலை,பட்டு,பீங்கான் (Porcelain) என்பன. குறிப்பாக,இங்கிலாந்து மக்களுக்குத் 'தேயிலை' ஒரு வெறியாகவே மாறியிருந்தது. அவர்கள் சீனாவிலிருந்து தொன் கணக்கில் தேயிலையையும், பட்டுத் துணிகளையும், பீங்கான் பாத்திரங்களையும் இறக்குமதி செய்தனர். இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. பிரித்தானியா, சீனாவிடமிருந்து பொருட்களை வாங்கியது. ஆனால், சீனா பிரித்தானியாவிடமிருந்து எதையும் வாங்க மறுத்தது."உங்கள் கம்பளித் துணிகள் எங்களுக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள். இதனால், பிரித்தானியா தன்னிடம் இருந்த வெள்ளி மற்றும் தங்கத்தைக் கொடுத்துத்து தேயிலையை வாங்க வேண்டியிருந்தது. இதனால், பிரித்தானிய கஜானா காலியானது. இதனை ’வர்த்தகப் பற்றாக்குறை’ (Trade Deficit) என்பார்கள். இதைச் சரிசெய்ய பிரித்தானியா ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டியது ,"சீனர்களுக்கு விற்பதற்கு நம்மிடம் ஒரு பொருள் வேண்டும். அவர்களால் மறுக்க முடியாத ஒரு பொருளாக அது இருக்க வேண்டும்." என்பதே அது.என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். அந்த சிந்தனையில் அவர்கள் கண்டுபிடித்த அந்தப் பொருள்தான் அபின் (Opium). '
'அபின்' என்பது ஒரு வகைப் போதைப் பொருள். இது பாப்பி (Poppy) செடியிலிருந்து கிடைக்கிறது. இதை விளைவிக்கச் சிறந்த இடம் எது? அவர்கள் தேர்ந்தெடுத்தது பிரித்தானியாவின் காலனித்ததுவ நாடுகளில் ஒன்றான இந்தியாவைத் தான்.
கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியாவின் வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த ஏழை விவசாயிகளை மிரட்டி."நீங்கள் நெல் பயிரிடக் கூடாது, கோதுமையை விளைவிக்கக் கூடாது. அபின் மட்டுமே பயிரிட வேண்டும்." விவசாயிகள் மறுத்தால், அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது.
உணவு விளைவிக்க வேண்டிய நிலங்களில், விஷம் விளைவிக்கப்பட்டது.
பிரித்தானியா, இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி அபினை விளைவித்தது. அந்த அபினை, சீனாவிற்குக் கடத்திச் சென்று விற்று, அதற்குப் பதிலாகச் சீனர்களிடமிருந்து வெள்ளி நாணயங்களைப் பெற்றது. அந்த வெள்ளியைக் கொண்டு, சீனாவிலிருந்து தேயிலையை வாங்கி, அதை இங்கிலாந்துக்கு அனுப்பியது.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி, சீனர்களின் அறிவை மழுங்கடித்து, பிரித்தானியா தனது தேநீர் கோப்பையை நிரப்பி மகிழ்ந்து கொண்டது.
பிரித்தானியா, அபினை நேரடியாகச் சீனாவிடம் விற்கவில்லை. ஏனென்றால் சீனாவில் அபின் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கடத்தல்காரர்கள் மூலம் இதைச் சந்தைப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்ட அபின், விரைவில் ஒரு பழக்கமாகி, பின்னர் ஒரு வெறியாக மாறத் தொடங்கியது.
1830-களில், சீனாவின் அரசு அதிகாரிகள், இராணுவ வீரர்கள், மாணவர்கள், சாதாரணக் கூலிகள் எனச் சுமார் 1.2 கோடி சீனர்கள் அபினுக்கு அடிமையாகியிருந்தார்கள். அபின் போதையால் சீனச் சமூகம் சீரழியத் தொடங்கியது. குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. சீனாவின் வெள்ளிப் பணம் முழுவதும் பிரித்தானியாவுக்குள் பாய்ந்தது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம், புகைப்பிடிக்கும் குழாய்களுக்கு முன்னால் மயங்கிக் கிடந்தது.
சீனப் பேரரசர் இதைக் கண்டு கொதித்தெழுந்தார். இதை அடக்க அவர் லின் ஜெக்சு (Lin Zexu) என்ற ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்தார். லின் ஜெக்சு, 1839-ல், பிரிட்டிஷ் வியாபாரிகளிடமிருந்த 20,000 பெட்டி அபினைக் கைப்பற்றி, அதைக் கடலில் கரைத்து அழித்தார்.
அத்துடன்,விக்டோரியா மகாராணிக்கு, "எங்கள் மக்களை அழிக்கும் இந்த விஷத்தை ஏன் விற்கிறீர்கள்?" என்று ஒரு கடிதமும் எழுதினார். பதிலுக்கு பிரித்தானியா என்ன செய்தது? மன்னிப்பு கேட்டதா? இல்லை!
"எங்கள் சொத்துக்களை (அபினை) அழித்துவிட்டீர்கள்! தடையற்ற வர்த்தகத்தைத் தடுத்துவிட்டீர்கள்!" என்று கூறி, பிரிட்டன் தனது நவீனக் கடற்படையைச் சீனாவுக்கு அனுப்பியது.
சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் போர் தொடங்கியது. இதுவே முதல் "அபின் போர்" (First Opium War) (1839-1842).எனப்பட்டது.
பழைய வாள்களையும், ஈட்டிகளையும் வைத்திருந்த சீன இராணுவம், பிரித்தானியாவின் நவீனப் பீரங்கிக் கப்பல்களை எதிர்க்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. சீனா சரணடைந்தது. அவமானகரமான 'நான்ஜிங் ஒப்பந்தத்தில்’ (Treaty of Nanjing) கையெழுத்திட்டது.(The Treaty of Nanking (or Nanjing), signed August 29, 1842)
அந்த ஒப்பந்தத்தம் சீனாவிற்கு பல பொறிகளை வைத்தது.
* சீனா, பிரிட்டனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது,இதனால் சீனா 2.1 கோடி யுவான் (21 million silver dollars) மதிப்பிலான இழப்பீட்டை இங்கிலாந்துக்கு கட்ட வேண்டியிருந்தது
* சீனத் துறைமுகங்களை பிரித்தானியாவிற்குத் திறக்கப்பட வேண்டும்.அதில் ஐந்து முக்கிய துறைமுகங்களை, அதாவது குவாங்சோ, ஷியாமென், ஃபூஷோ, நிங்போ, ஷாங்காய் ஆகிய துறை முகங்களை பிரித்தானி வணிகத்துக்கு திறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
*சீனா தானாக விரும்பியபடி சுங்கவரி விதிக்க முடியாது. பிரித்தானியா விதிகளுக்கு இணங்க சுங்கவரி நிர்ணயிக்க நேரிட்டது.
*பிரித்தானிய குடிமக்கள் மீது சீன சட்டம் நேரடியாகப் பொருந்தாது. அவர்களுக்கு தனி சட்ட பாதுகாப்பு (extraterritorial rights) கிடைத்தது.
* மிக முக்கியமாக, ஹாங்காங் (Hong Kong) தீவு, பிரித்தானியாவிற்கு சொந்தமாக்கப்பட்டது.
இதுதான் சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானத்தின்’ (Century of Humiliation) தொடக்கம்.
இப்போது, இந்த வரலாற்று நிகழ்வில் இந்தியவின் பங்கை நோக்கின், பிரித்தானியா அபினை விளைவித்தது சரி, அதைச் சீனாவுக்குக் கொண்டு சென்று விற்றது யார்?
பிரித்தானியக் கப்பல்கள் மட்டுமல்ல. பல இந்திய வர்த்தகர்களும் இதில் ஈடுபட்டனர். குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த பார்சி (Parsi) மற்றும் மார்வாடி சமூகத்தினர் ஆவர். அவர்களில் முக்கியமானவர்கள் டாட்டா (Tata) மற்றும் ஜீஜீபாய் (Jeejeebhoy) குடும்பத்தினர். பார்சி இனத்தவரான டாட்டா குடும்பத்தினர் இப்படித்தான் செல்வம் கொழிக்கத் தொடங்கினார்கள்.
ஜாம்செட்ஜி டாட்டா (Jamsetji Tata), நவீன இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். இவரது தந்தை நுஸர்வான்ஜி டாட்டா மற்றும் ஜாம்செட்ஜி டாட்டா ஆகியோர், தங்கள் ஆரம்பகால மூலதனத்தை, சீனாவுடனான அபின் வர்த்தகத்தில் தான் ஈட்டினார்கள்.
அவர்கள் குஜராத் மற்றும் மால்வா பகுதிகளில் விளைந்த அபினை, கப்பல்களில் ஏற்றிச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தனர். "டாட்டா அண்ட் கோ" என்ற பெயரில் ஷாங்காய் நகரில் கிளை அலுவலகம் கூடத் திறக்கப்பட்டது.
இந்த அபின் வர்த்தகத்தில் கிடைத்த அந்த அபரிமிதமான இலாபம் தான், பின்னாளில் இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலை (Tata Steel), தாஜ் ஹோட்டல், மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கான மூலதனமாக (Capital) மாறியது.
மும்பை நகரம் இன்று ஒரு பிரம்மாண்டமான வர்த்தக மையமாக இருப்பதற்கு, அன்று சீனாவில் விற்கப்பட்ட அபினின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாத, கசப்பான உண்மை. டாட்டா மட்டுமல்ல, பல பார்சி மற்றும் மார்வாடி வர்த்தகக் குடும்பங்கள் இந்த வழியில் தான் வளர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சீனா ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறது? ஏன் தைவான் விஷயத்திலும், தென் சீனக் கடலிலும் பிடிவாதமாக இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள, நாம் இந்த வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
சீனப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் முதல் பாடம் எது தெரியுமா,'நூற்றாண்டு அவமானம்’. ’நாம் பலவீனமாக இருந்தோம்; அதனால் போதை மருந்து கொடுத்து நம்மை அழித்தார்கள். நம் நிலங்களைப் பறித்தார்கள். இனி ஒருபோதும் சீனா அப்படி ஏமாறக் கூடாது. இனி ஒருபோதும் சீனா பலவீனமாக இருக்கக்கூடாது.’
ஜி ஜின்பிங் பேசும், "சீனக் கனவு" (Chinese Dream) என்பது, இந்த 150 ஆண்டுகால அவமானத்தைத் துடைத்து, மீண்டும் உலகத்தின் உச்சிக்குச் செல்வதுதான்.
வரலாறு விசித்திரமானது.
அன்று இந்தியா விளைவித்த அபின், சீனாவை அழித்தது.
அன்று ஈட்டிய இலாபம், இந்தியாவின் நவீனத் தொழில்துறைக்கு அடித்தளமிட்டது.
அன்று அவமானப்பட்ட சீனா, இன்று அந்த வடுக்களைச் சரிசெய்ய, உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
"வரலாற்றை மறப்பவர்கள், அதை மீண்டும் வாழச் சபிக்கப்படுவார்கள்" என்பதுதான் உண்மை.இது சீனாவிற்கு மட்டுமல்ல, தமிழ் இனத்துக்கும் பொருந்தும்.
"வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் மிகக் கடினமானது. ஓர் இனத்தை வேரறுக்கப் பெரும் போர் தேவையில்லை,போதை ஒன்றே போதும்" என்பது சீன வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம். அன்று சீனா அபின் புகையில் சரிந்தது, இன்று நம் நாடும், இளைஞர்களும் கஞ்சா புகையிலும், ஐஸ் போதையிலும், மதுவின் பிடியிலும் சிக்கித் தள்ளாடுகிறனர்.
அன்று சீனாவைச் சீரழிக்க பிரித்தானியா எனும் அந்நிய சக்தி இருந்தது. ஆனால் இன்று? நம் சொந்த மண்ணிலேயே, நம் வருங்காலத் தலைமுறையானது, கல்வி கற்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி, சிந்தனை மழுங்கி வீதியில் திரிகிறது. அன்று குடித்தாலே பாவம், தவறு என்று யாருக்கும் தெரியாமல் மறைத்துக் குடித்தார்கள். ஆனால், இன்று மீசை முளைப்பதற்கு முன்பே வீதியோரங்களில் அமர்ந்து குடித்துக் களிக்கிறார்கள் நமது விடலைகள்.பொறுப்புள்ள சமூகப் பெரியவர்கள் இதை கண்டு இன்று ஒதுங்கிப் போகின்றனர்.
நூற்றாண்டு கால அவமானத்திலிருந்து (Century of Humiliation) சீனா மீண்டு, இன்று வல்லரசாகிவிட்டது.
ஆனால், உலகம் போற்றும் அறிவுச் சமூகமாகத் திகழ்ந்த தமிழினம், இன்று தன் இளைய தலைமுறையைப் போதைக்குப் பலிகொடுத்து விட்டு, மீள முடியாத இருளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உலகிற்கே வணிகத்தையும், அறத்தையும் கற்றுக்கொடுத்த ஓர் அறிவுச் சமூகம், தமது இருப்புக்காக, சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் சமூகம் இன்று போதைப் பிடியில் சிக்கித் தன் சுயத்தை இழந்து புத்தி மழுங்கி கத்தியுடன் நிற்பது தான் காலத்தின் கோலம்.
அன்று பிரித்தானியர் அபினைக் கொண்டு சீனாவை அழித்தார்கள். சீனா போதை பொருளால் வீழ்ந்த சாம்ராஜ்ஜியமாகியது. பிரித்தானியா செய்த வரலாற்றுத் துரோகம் இது!இன்று பிரித்தானியா தன்னை மனித உரிமைகளின் மீட்பாராகவும், ஜனநாயகத்தின் வழிகாட்டியாகவும் காட்டி நிற்கிறது.
ஆனால், இன்று பேராசை கொண்ட நபர்களும், குழுக்களும் எமது இளைஞர்களை,சிறுவர்களை ஐஸ் போதை மயக்கத்திலும், மது போதையிலும் தள்ளி வேரறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
'நம் பிள்ளைகளுக்குப் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைப்பதை விட, போதையில்லாத தெளிவான புத்தியையும், சுயமரியாதையையும் சேர்த்து வைப்பதே மிகச் சிறந்த சொத்து. இல்லையேல், நாளைய வரலாறு நம்மை கேலி செய்யும். 'போதையால் வீழ்ந்த இனம்' என்றே பதிவு செய்யும்!'
ஒரு இனத்தைக் காப்பது அதன் இளைஞர்களை காப்பதில் தொடங்குகிறது.
அது அனைத்து சமூக கட்டுமானங்களினதும் பொறுப்பு!
மிளிரும் வீடுகளும்,பெறுமதியான வாகனங்களும், ஆடம்பர வாழ்வும் சமூக ஆரோக்கியத்தை பிரதிபலிக்காது.சமூக ஆரோக்கியம் பகுத்தறிவும் தெளிவான சிந்தனையுடன் அயலவனை நேசிக்கும் பண்புள்ள சமூகமாக வளருவதே ஆரோக்கியமானது.
வரலாறு எம்மை எச்சரிக்கிறது
“போதையால் வீழ்ந்த ஒரு இனம், ஒருபோதும் தன் எதிர்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்ப முடியாது.” என்று.
அன்று சீனாவே அபினால் வீழ்ந்தது. இன்று அதே சூழலின் நிழல் நம் சமூகத்தையும் மூடியுள்ளது. நாமாக விழித்தெழ வேண்டும். இதற்கான பொறுப்பு பெரியவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மத தலைவர்கள், அரசு, எல்லோருடையதும் தான்.
இல்லையேல்… வரலாறே நம்மைப் பற்றிக் இவ்வாறு கூறும்:
“தம் தலைமுறையைப் பாதுகாக்கத் தவறியதால் வீழ்ந்த இனம் ஒன்று இங்கு இருந்தது” என்று.
"Humiliation does not break a nation; it awakens it.”
நா.இராஜமனோகரன்
08 December 2025