Sunday, December 21, 2025

10G தொழிநுட்பம்....ஒரு இலத்திரனியல் பாய்ச்சல்...!

(10G Technology… A Digital Leap!)





“10G is the digital bridge between dreams and reality.”

நவீன உலகில் தொழில்நுட்ப வேகப் புரட்சி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தகவல் பரிமாற்றத்தில் “வேகம்” என்பது இனி ஒரு ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியத் தேவையாகி விட்டது. இந்தச் சூழலில், சீனா சமீபத்தில் எடுத்த பெரிய முன்னெடுப்பு, உலகின் கவனத்தை ஒருசேர குவித்துள்ளது. ஹுவாய் (Huawei) மற்றும் சைனா யூனிகாம் (China Unicom) இணைந்து, உலகின் முதலாவது வணிக நிலை சார்ந்த 10G அகன்ற அலை வரிசை வலையமைப்பை (broadband network ) அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தகவல் தொடர்பியல் துறையில் புதிய மைல்கல்லாக உருவெடுத்துள்ள 10G தொழில்நுட்பம்,உலகின் நவீனதேவைகளுக்கான அதிவேக, நம்பகத்தன்மை வாய்ந்த, செயற்கை நுண்ணறிவு இணைந்த தகவல் பரிமாற்ற அமைப்பு ஆகும். இது ஒரு சாதாரண இணைய வேக மேம்பாடு அல்ல.மாறாக, வரவிருக்கும் இலத்திரனியல் உலகின் அடித்தளமாக உருவெடுக்கும் முழுமையான ஒளிவட அடிப்படை மேடை (fiber-based platform) ஆகும். பெரும்பாலான நாடுகள் இன்று 1 Gbps அல்லது 0.5 Gigabit இணையத்தை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கின்றன. சில வளர்ச்சி அடைந்த நாடுகள் 2-5 Gbps வரை வழங்கினாலும், 10 Gbps (அதாவது 10G) என்பது ஒரு பெரிய தர உயர்வு என்றே கூறலாம்.

அதாவது,10G அகன்ற வரிசை வலையமைப்பு உலகின் இணைய உள்கட்டமைப்பில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியுள்ளது என்றால் மிகையில்லை.இது சாதாரண “வேக உயர்வு” மட்டுமல்ல தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை செயல் முறைகளையே முற்றிலுமாக மாற்றும் முயற்சியாகும்.

இங்கு ஒளிவடம்(Optical Fiber Cable)தான் 10G-க்கு அடிப்படையாக அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய உயர்தர இணையம் அனைத்தும் ஒளியிழை(optical fiber) என்ற கண்ணாடிக் கம்பி வழியாக செல்கிறது. இதில் தகவல்கள் ஒளி (light pulses) வடிவில் செல்லும்.

ஒளியின் வேகம் மின்சாரத்தை விட 10 மடங்கு வேகமானது அதுமட்டுமன்றி சமிக்ஞை இழப்பு(signal loss) இதில் மிக குறைவு.அதிகளவு அலை வரிசையானது (bandwidth) அதிக தூரம் வரை சிதைவின்றி செல்லும். அத்துடன்
10G இணையத்தின் முழுக்கட்டுமான ஆற்றலும் இந்த கண்ணாடிக் கம்பிகள் வழியாகத்தான் நடக்கிறது.

பலர் இதை 5G-க்குப் பிறகு வரும் 10th Generation என நினைப்பார்கள். ஆனால் அது தவறு.10G = 10 Gigabit per second.இது முக்கியமாக வட வலையமைப்பு அல்லது ஒளி வடவலையமைப்பு (Cable internet / Fiber networks) மூலமாக வழங்கப்படும் மிகை வேக(Super fast)இணையத் தொழில்நுட்பம் ஆகும்.5G என்பது காற்று வழி (Air Medium) தொடர்பாடல் தொழில்நுட்பமாகும்.
அதாவது,10G என்பது ஒளிவடத்தின் (Optical Fiber)ஊடாக நடைபெறும் தகவல் பரிமாற்றமுறை.இதனால், இரண்டும் ஒன்றல்ல.இதனை கைப்பேசி வலையமைப்பில் பயன்படுத்த முடியாது.

10G என்பது,கைபேசி தலைமுறை(Mobile Generation) அல்ல.5G என்பது ஐந்தாம் தலைமுறை கைபேசி தொழில்நுட்பமாகும்(Fifth Generation mobile technology).இனி வரப்போவது 6G-ஆறாம் தலைமுறை கைபேசி தொழில் நுட்பமாகும் (Sixth Generation mobile technology). கைப்பேசியானது 10 Gbps வேகம் பெற வேண்டுமெனில் ஆறாம்  தாலைமுறை வருகையுடன் தான் அது வேகம் எடுக்கும் என்பதுடன், அதன் வேகம்50 Gbps முதல் 1 Tbps வரை இருக்கும் அதாவது, எதிர்கால கைபேசி வலையமைப்புக்கள் 10G வேகத்தை தாண்டி செல்லும் என்பதே யதார்த்தம்.

நாம் இன்று கைப்பேசிகளில் 5G கைபேசி (Mobile)ல் கம்பியில்லா தொழில்நுட்பத்தை (Wireless Technology)ஐ பயன்படுத்துகின்றோம். இந்த 5G என்பது கைபேசிகள் மற்றும் கம்பியில்லா சாதனங்களுக்கு(wireless devices) க்கு பயன்படுத்தப்படும் கம்பியில்லா கைப்பேசி வலையமைப்பு (wireless cellular network) ஆகும்.இது அடிப்படையாக கோபுரங்கள்(Base towers) மற்றும் காற்றில் வானொலி அலைகள் (radio waves in the air)மூலம் செயற்படுகின்றது. அத்துடன் இது சிம் அடிப்படையிலான இணைப்பு (SIM-based connectivity) மற்றும்  அகன்ற அலை வரிசை(broadband) இணைப்பூடாக இயங்குகிறது. இங்கு காற்று ஊடகமாக(air medium or pathway) பயன்படுத்தப்படுகிறது. எந்த பௌதிக வடமும் (physical cable, Ex:fiber, copper) இதற்கு தேவையில்லை. ஆனால்,10G அகன்ற அலைவரிசை என்பது 5G கைபேசி இணையம் போன்ற “கம்பியில்லா” தொழில்நுட்பம் அல்ல.இது ஒளிஇழை (fiber-optic) வடம் வழியாக வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்கு வழங்கப்படும் "நிலையான அகன்ற அலைவரிசை" (“fixed broadband”)ஆகும்.

10G ஒளி இழை வழியாக இயங்குவதால் வலையமைப்புகளின் குறுக்கீடு இல்லாதது. அதுமட்டுமன்றி மழை, காற்று,மின்னல் ஆகியவற்றின் பாதிப்புகள் இதில் மிகக் குறைவு.அத்துடன் சீரான செயல்திறன் கொண்டது.சமிக்ஞை வீழ்ச்சி கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்றே கூறலாம்.இது வங்கி, அவசர சேவைகள், தரவு மையங்கள் போன்றவற்றுக்கு மிகவும் ஏற்றது.

அதுமட்டுமன்றி,10G தொழில்நுட்பத்தில் பதிவிறக்க வேகம் 10 Gbps. அதே போல் பதிவேற்ற வேகமும் 10 Gbps வரை சேர்க்க முடியும். இது WiFi, 4G, 5G ஆகியவற்றில் கிடைக்காத ஒரு முக்கிய நன்மை ஆகும்.

உதாரணமாக:
YouTube creators, Cloud server upload, CCTV cloud backup ஆகியவற்றில் பதிவேற்றம் (upload) வேகம் மிக முக்கியம் என்பது கவனிக்கத்தக்கது.

இது,99.99% நம்பகத்தன்மை கொண்டது என்பதுடன். ஒளிவடம்  வழியாக இயங்குவதால் 10G வலையமைப்பு ஏனையவற்றின் குறுக்கீடுகளுக்கு உட்படுவதில்லை.ஒளியியல் இழைகள்(Optical fiber), தந்திகளற்ற கோபுரங்கள்(wireless towers)என்பவற்றை விட 40–60% குறைந்த எரி சக்தியில் தரவுகளை பரிமாறும் திறன் கொண்டது. இதனால்,பசுமை வலையமைப்பு, சுற்றுச்சூழல் நட்பு ICT உள்கட்டமைப்பு,நீண்ட கால செலவு குறைப்பு எனப்படும் பல நன்மைகள் இதனால் கிடைக்கின்றன.

எனவே,10G தொழில்நுட்பம் என்பது வெறும் இணைய மேம்பாடு மட்டும் அல்ல,இது நமது வீடு, வேலை, மருத்துவம், கல்வி, தொழில்,நகர நிர்வாகம் ஆகிய அனைத்தையும் மாற்றும் மிகப் பெரிய இலத்திரனியல் புரட்சி ஆகும்.

அதி வேகத்தைத் தாண்டி, அதன் அதீத நம்பகத்தன்மை(High Reliability),
AI பாதுகாப்பு, மிகக் குறைந்த தாமதம் (Ultra Low latency), எதிர்கால தயார்நிலை (future-readiness) எனப் பல அம்சங்கள் உலகின் அடுத்த தலைமுறையை முன்னோக்கி  உந்தித்தள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

“10G isn’t just speed; it’s the future flowing through fiber.”

நா.இராஜமனோகரன்
07 December 2025

No comments:

Post a Comment