Saturday, December 20, 2025

உலகலாவிய இரத்தம் பகிர்தல் (“blood-sharing”) என்ற போதை முறைமையும்,இலங்கையின் அதன் நிலையும்..!

🩸 “Sharing blood is not sharing love, it’s sharing death.”

போதைப் பழக்கங்களில் வினோதமான மற்றும் ஆபத்தான வழிகளில் ஒன்றாக இன்று காணப்படும் புதிய வழிமுறையாக “இரத்தம் பகிர்தல்” (blood-sharing) என்ற முறைமை காணப்படுகிறது. 

இந்த முறைமையில், போதைவஸ்து பயன்படுத்திய நபரின் இரத்தத்தை, இக்குழுவில் அல்லது பிற நபருக்கு உடனடியாக மாற்றிக் கொடுத்து, அதனூடாக போதை உணர்வு பெற முயற்சிப்பதை இது குறிக்கிறது. 

இது அதிகமாக ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. இதனை "ப்ளூடூத்திங்" (bluetoothing)அல்லது "ஹாட்-ஸ்பாட்டிங்" (Hot spotting) என சில ஊடகங்களால் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இதனை “blood-sharing”, “blood-swapping" அல்லது ஆய்வுகளில் காணப்படும் பெயரால் "flashblood" என்றும் குறிப்பிடப்படும்.

முதலில் போதை எடுத்தவரின் இரத்தத்தில் இயல்பாக போதை சார்ந்த இரசாயனங்கள் அல்லது ஊசியில் ஏற்றப்பட்ட பொருள் இருந்து கொண்டிருப்பதால், அவரின் இரத்தத்தை வேறு ஒருவருக்குள் செலுத்துகையில் அதில் உள்ள போதை ஏற்றப்பட்டவருக்கு உடனடி போதை உணர்வை அது ஏற்படுத்தும்.

முதலில் ஒரு நபர் (போதை நுகருநர்) முன்னர் எடுத்துள்ள போதை பொருள் அல்லது ஊசி மூலம் (intravenous) தனது இரத்தில் போதை சார்ந்த பொருளை எடுத்திருப்பார்.சிறிது நேரம் கழித்து, அவரது இரத்தத்தில் இருந்து சில மில்லி லிட்டர்கள்  ஊசி மூலம் எடுத்து அந்த இரத்தத்தை மற்ற நபருக்கு அல்லது பலருக்கு ஏற்றுவதன் மூலம் போதையை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு பகிரப்பட்ட இரத்தம் உடனடியாக அல்லது தாமதமாக போதை உணர்வை ஏற்படுத்தலாம், என்று சில செய்திகள் அல்லது ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.இதன் மூலம் பணம் மிச்சமாகிறது, குழுவாக பலர் பயன்படுத்தலாம் என்ற நோக்கமே இந்த செயல் நிலைக்கு காரணம் ஆகின்றது.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், இரத்தம் என்பது மிக உயர்ந்த தொற்று நோய்களை பரப்பும் கருவியாகும்.இதன் மூலம் HIV/AIDS, Hepatitis B, Hepatitis C போன்றவை நேரடியாக அல்லது அதிக அளவில் பரவ வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரத்தம் மூலம் HIV தொற்று ஏற்படும் வாய்ப்பு 90 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

சாதாரண syringe sharingஐ விட இத்தகைய “இரத்தம் நேரடியாக பகிர்தல்” மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இங்கு, இரத்தம் நேரடியாக பகிர்தல் என்பது, சில போதைப்பொருள் பயன் நுகருநர் போதையின் "வலுவான தாக்கத்தை" (strong effect) பெற, மற்றொருவரின் இரத்தத்தை சிறிதளவு போதைப் பொருளில் கலந்து ஊசி வழியாக செலுத்துவார்கள்.இதை சில இடங்களில் "blood mixing" அல்லது"flashblood"என்று அழைக்கின்றனர்.

சமூகத்தில் இவ்வளவு ஆபத்தான பழக்கம் விரிவடைந்தால், பொதுச் சுகாதார சிக்கல்கள் நாட்டில் மேலும் பெருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, போதை பொருள் மற்றும் ஊசி சுத்தம், பகிர்தல் தொடர்பான கட்டுப்பாடு இல்லாத நாடுகளில் அதிகமான  இந்த செயல்கள் விரிவடைந்து வருவதாக செய்திகள் வெளியான உள்ளன. உதாரணமாக பசிபிக் தீவுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம்.

சில நாடுகளில்,உதாரணமாக Fiji,தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், லெசோத்தோ, தான்சானியா போன்ற நாடுகளில் இந்த  புதிய “போதைப் போக்கு” (trend)  அறிமுகமாகியுள்ளதாகவும், அதனால் HIV பரவலுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலை அதிகப்படியான போதைப் பயன்பாடு, சமூகவியல் அழுத்தம்,வசதி குறைவு போன்ற காரணங்களால் உருவாகுகிறது.

ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருவதாவது, இரத்தம் பகிர்தல் வழியாக HIV பரவலின் இருப்பு மற்றும் அதன் கண்காணிப்பு தொடர்பாக பல சவால்களை இந்த நாடுகள் எதிர்நோக்க வேண்டி உள்ளது என்பதையே.

எனவே,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதுடன் “இரத்தம் பகிர்தல் = மிக உயர்ந்த அபாயம்” என்பது மக்களுக்கு விளக்கப்பட  வேண்டும்.

போதை பழக்கத்தைக் குறைக்க தீர்மானமான நடவடிக்கைகள் (harm reduction) வேண்டியது மிக அவசியம். தெளிவான போதை ஒழிப்புக் கொள்கைகள், ஊசி பகிர்தல் தடுப்பு, மாற்று சிகிச்சைகள் என்பன தொடர்பில் நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

இரத்த பரிமாற்றம் (transfusion) மற்றும் போதை சார்ந்த இரத்த செயல்முறைகள் (non-medical blood sharing) ஆகியவற்றில் வேறுபாடுகளை உள்ளடக்கி  கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

இது தொடர்பில் ஆராய்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு “இரத்தம் பகிர்தல்” என்ற செயல்திறன் எந்த அளவுக்கு உள்ளதென இலக்குகள், தரவுகள், பரவல் நிலை ஆகியவை தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் HIV பரவல் தன்மையில் “குறைந்த அளவிலான தொற்றுநோய்” (low-level epidemic) என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 15-49 வயது பிரிவினர் இடையே HIV பரவல் 
<0.1வீதம் என கருதப்படுகிறது. 

2011-ஆம் ஆண்டில் தகவல்களின் படி, இலங்கையில் இரத்த மூலமான மற்றும் ஊசி வழியாக HIV தொற்றின் சான்றுகள்  குறைவாக  உள்ளதாக அறியக் கிடைக்கிறது.“2008–09 ஆண்டுகளில் நாட்டில் இரத்தம் அல்லது இரத்தப் பொருட்கள் மூலம் தொற்று ஏற்பட்ட விவரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.” 

மேலும், இலங்கை இது தொடர்பில் “முக்கியமான மக்களிடையே” (key populations) படிப்படியாக தனது கவனத்தை செலுத்தி வருகிறது. உதாரணமாக, “Beach boys” என அழைக்கப்படும் கடற்கரையில் சுற்றுலாப் பணி செய்யும் துணை நபர்கள் இடையிலும் சில HIV அபாய பண்புகள் (sexual risk behaviours) இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

தற்போது கிடைக்கப் பெறுகின்ற அடிப்படையான இலங்கை ஆய்வுகளில் “இரத்தம் பகிர்தல்" (blood-sharing) என்ற  செயல்முறை (blood sharing among drug injectors) பற்றிய தரவுகள் குறைவாக அல்லது வெளிப்படையாக இல்லை என்றே கூறலாம்.

இருப்பினும், Intravenous Drug Use / User (IVDU)ன் போது ஊசி மூலம் பகிர்தல் என்ற தகவல்கள் சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

அதன்படி, இத்தகைய “இரத்தம் பகிர்த்தல்” போன்ற செயல் இலங்கையில் பொதுவாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது இல்லை என்றும், அதனால் நாட்டில் இது விசாலமாக பரவியிருப்பதாக எந்த  சான்றுகளும் காணப்படவில்லை என்பதும் தெரிகிறது.

எனினும், புதிதாக உருவாகும் இவ்வாறான செயல்முறைகள் குறித்து  பதிவு செய்யப்படாமையால் “ அபாயம் இல்லை” என்று முழுமையாக கூற முடியாது.

குறைந்த தகவல் அறிக்கை (under-reporting) மற்றும் குறைந்த கண்காணிப்பு, போதை நுகருநர்கள் (people who inject drugs = PWID) போன்ற வகுதியினரை  கண்காணிக்கும் தரவுகள் நம்மிடம் குறைவாகவே உள்ளன.

“இரத்தம் பகிர்தல்” எனும் புதிய வடிவமைப்பில் போதைச் செயல்பாடுகள்  இருப்பதால், அதற்கான ஆய்வுகள், தரவுகள், நடத்தை ஆய்வுகள்(behavioural surveys) தொடர்பில் இன்னும் முழுமையான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

இலங்கை மருத்துவ மற்றும் பொது சுகாதார அமைப்புகள், உதாரணமாக National STD/AIDS Control Programme போன்றவை இரத்தம் பகிர்தல் (blood-sharing) என்ற புதிய நடத்தை (new behaviour) பற்றிய தரமான கற்றல் (qualitative study) மற்றும் பரவல் பரிசோதனை,உயிரியல் நடத்தை ஆய்வு(bio-behavioural survey) என்பவற்றை மேற்கொள்ள வேண்டும்.

போதை நுகருநர்களுக்கு (PWID) இடையேயான ஊசி மூலம் பகிர்தல் மற்றும் “இரத்தம் நேரடியாக பகிர்தல்” போன்ற நிலைகளை கண்காணிக்கும் தகவல் தளங்கள் அல்லது பதிவு முறைமைகள் உருவாக்கப்பட வேண்டியது முக்கியம்.

சமூக விழிப்புணர்வு முறைமைகள் என்ற அடிப்படையில் “இரத்தம் பகிர்தல் என்பது மிக உயர்ந்த அபாயம்” என்பதை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொருவரினதும் கடப்பாடாகும்.போதைப் பழக்கம் இருப்பதே மிக ஆபத்தானது, அதனுடன் "இரத்தம் பகிர்தல்" போன்ற நடைமுறைகள் இணைந்தால் தனியாருக்கும் சமுதாயத்திற்குமான பாதிப்பு மிகவும் அதிகமாகும். எனவே "இங்கு எதுவும் நடக்காது" என்று ஆறப்போடுவது மிகவும் தவறு. விழிப்புணர்வு, தடுப்பு, உடனடி சிகிச்சை என்பன இதனை தடுக்கும் வழிமுறைகளாகும்.

“When blood becomes the drug, humanity begins to fade.”

நா.இராஜமனோகரன்
11 November 2025

 போதை...பேரரசின் பேராசை!



“You may lose a battle, but never lose the reason you fight.”

ஒரு தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் மண்ணில் முளைவிடும் தலைமுறைகளின் மனநிலையால் தீர்மானிக்கப்படுகிறது. போர்க்களத்தில் பீரங்கிகள் முழங்கி, பல உயிர்களின் குருதிச் சகதியில் ஒரு நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றலாம். ஆனால், ஒரு நாட்டின் அறிவையும், ஆன்மாவையும், எதிர்காலத்தையும் அழிக்க, குண்டுகள் தேவையில்லை. போதையே போதும் என்பதை, வரலாறு நமக்கு ஏற்கனவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

அதன் மிகத் தெளிவான உதாரணம்  பிரித்தானிய பேரரசு. உலகம் முழுவதும் “சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம்” என பெருமைப்பட்ட இங்கிலாந்து, தன் பேராசைக்காக இரு மாபெரும் நாகரிகங்களை ,இந்தியாவையும் சீனாவையும் ,வேறு வேறு விதமாக உலுக்கியது. சீனாவை அபின் என்ற விஷத்தால் மயக்கி சீரழித்தது,அந்த விஷத்தை விளைவிக்க, இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி தங்கள் வளமான நிலங்களில் உணவுக்கு பதிலாக போதைப் பயிரை வளர்க்க கட்டாயப்படுத்தி திணித்தது.

வரலாற்றில் இந்தக் கொடூரமான உத்தியை மிகத் துல்லியமாக, மிக மிகக் கொடூரமாக அரங்கேற்றியது  பிரித்தானிய பேரரசு.

"பிரித்தானி சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைந்தே இல்லை" என  பிரித்தானிய ஆர்பரித்தது தொடர்பில், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தெரிந்த கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது "பிரித்தானியர்களை இருட்டில் விட இறைவனுக்கே பயம்" என்பதே அது.

பெர்னார்ட் ஷா பிரித்தானிய பேரரசின் ஆணவத்தையும் பேராசையையும் நையாண்டி செய்த கூற்று அது.அதன் ஆழமான பொருள், பிரித்தானியர்கள் எங்கு சென்றாலும் ஆக்கிரமிப்பு, இலாப நோக்கம், சுரண்டல், கலாசார அழிப்பு போன்ற மாற்றங்களை ஏற்படுத்தினர்.அவர்கள் இருக்கும் இடம் முழுவதும் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றிகளாய் செயல்படுட்டார்கள்.
அத்தகைய பிரித்தானியார்களை "இருட்டில்" (அதாவது தனது கட்டுப்பாட்டிற்கு வெளியே) விடுதல் இறைவனுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவர்கள் என்பதே அவரின் நையாண்டி ஆகும்.இதுவே பெர்னார்ட் ஷாவின் மேற்கோளின் கசப்பான உண்மையும் கூட. இப்படிப்பட்ட பிரித்தானியாவின் இந்த கொடூர நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது சீனா.அதனை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அபின் (Opium). அந்த ஆயுதம் விளைவிக்கப்பட்ட இடம் இந்தியா.

இன்று நாம் பார்க்கும் வரலாறு, சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானம்’ (Century of Humiliation) பற்றியும், அதில் இந்தியாவின் இரத்தமும், இந்தியத் தொழிலதிபர்களின் (டாட்டா உட்பட) மறைக்கப்பட்ட பங்கும் பற்றிய ஒரு கசப்பான வரலாற்றைத்தான்.18-ம் நூற்றாண்டில், சீனா உலகப் பொருளாதாரத்தின் ஒரு தனித்தீவு போல இருந்தது. சீனப் பேரரசர்கள், "எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களிடமே உள்ளன. காட்டு மிராண்டிகளான வெளிநாட்டவர்களிடம் இருந்து எங்களுக்கு எதுவும் தேவையில்லை" என்ற கர்வத்துடன் தங்கள் வணிகக் கதவுகளை மூடி வைத்திருந்தனர். ஆனால், பிரித்தானியாவுக்கு சீனா அவசியமானதாக இருந்தது காரணம், தேயிலை,பட்டு,பீங்கான் (Porcelain) என்பன. குறிப்பாக,இங்கிலாந்து மக்களுக்குத் 'தேயிலை' ஒரு வெறியாகவே மாறியிருந்தது. அவர்கள் சீனாவிலிருந்து தொன் கணக்கில் தேயிலையையும், பட்டுத் துணிகளையும், பீங்கான் பாத்திரங்களையும் இறக்குமதி செய்தனர். இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. பிரித்தானியா, சீனாவிடமிருந்து பொருட்களை வாங்கியது. ஆனால், சீனா பிரித்தானியாவிடமிருந்து எதையும் வாங்க மறுத்தது."உங்கள் கம்பளித் துணிகள் எங்களுக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள். இதனால், பிரித்தானியா தன்னிடம் இருந்த வெள்ளி மற்றும் தங்கத்தைக் கொடுத்துத்து தேயிலையை வாங்க வேண்டியிருந்தது. இதனால், பிரித்தானிய கஜானா காலியானது. இதனை ’வர்த்தகப் பற்றாக்குறை’ (Trade Deficit) என்பார்கள். இதைச் சரிசெய்ய பிரித்தானியா ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டியது ,"சீனர்களுக்கு விற்பதற்கு நம்மிடம் ஒரு பொருள் வேண்டும். அவர்களால் மறுக்க முடியாத ஒரு பொருளாக அது இருக்க வேண்டும்." என்பதே அது.என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். அந்த சிந்தனையில் அவர்கள் கண்டுபிடித்த அந்தப் பொருள்தான் அபின் (Opium). '

'அபின்' என்பது ஒரு வகைப் போதைப் பொருள். இது பாப்பி (Poppy) செடியிலிருந்து கிடைக்கிறது. இதை விளைவிக்கச் சிறந்த இடம் எது? அவர்கள் தேர்ந்தெடுத்தது பிரித்தானியாவின் காலனித்ததுவ நாடுகளில் ஒன்றான  இந்தியாவைத் தான்.

கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியாவின் வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த ஏழை விவசாயிகளை மிரட்டி."நீங்கள் நெல் பயிரிடக் கூடாது, கோதுமையை விளைவிக்கக் கூடாது. அபின் மட்டுமே பயிரிட வேண்டும்." விவசாயிகள் மறுத்தால், அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. 

உணவு விளைவிக்க வேண்டிய நிலங்களில், விஷம் விளைவிக்கப்பட்டது.

பிரித்தானியா, இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி அபினை விளைவித்தது. அந்த அபினை, சீனாவிற்குக் கடத்திச் சென்று விற்று, அதற்குப் பதிலாகச் சீனர்களிடமிருந்து வெள்ளி நாணயங்களைப் பெற்றது. அந்த வெள்ளியைக் கொண்டு, சீனாவிலிருந்து தேயிலையை வாங்கி, அதை இங்கிலாந்துக்கு அனுப்பியது.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி, சீனர்களின் அறிவை மழுங்கடித்து, பிரித்தானியா தனது தேநீர் கோப்பையை நிரப்பி மகிழ்ந்து கொண்டது.

பிரித்தானியா, அபினை நேரடியாகச் சீனாவிடம் விற்கவில்லை. ஏனென்றால் சீனாவில் அபின் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கடத்தல்காரர்கள் மூலம் இதைச் சந்தைப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்ட அபின், விரைவில் ஒரு பழக்கமாகி, பின்னர் ஒரு வெறியாக மாறத் தொடங்கியது. 

1830-களில், சீனாவின் அரசு அதிகாரிகள், இராணுவ வீரர்கள், மாணவர்கள், சாதாரணக் கூலிகள் எனச் சுமார் 1.2 கோடி சீனர்கள் அபினுக்கு அடிமையாகியிருந்தார்கள். அபின் போதையால் சீனச் சமூகம் சீரழியத் தொடங்கியது. குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. சீனாவின் வெள்ளிப் பணம் முழுவதும் பிரித்தானியாவுக்குள் பாய்ந்தது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம், புகைப்பிடிக்கும் குழாய்களுக்கு முன்னால் மயங்கிக் கிடந்தது.

சீனப் பேரரசர் இதைக் கண்டு கொதித்தெழுந்தார். இதை அடக்க அவர் லின் ஜெக்சு (Lin Zexu) என்ற ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்தார். லின் ஜெக்சு, 1839-ல், பிரிட்டிஷ் வியாபாரிகளிடமிருந்த 20,000 பெட்டி அபினைக் கைப்பற்றி, அதைக் கடலில் கரைத்து அழித்தார்.

அத்துடன்,விக்டோரியா மகாராணிக்கு, "எங்கள் மக்களை அழிக்கும் இந்த விஷத்தை ஏன் விற்கிறீர்கள்?" என்று ஒரு கடிதமும் எழுதினார். பதிலுக்கு பிரித்தானியா என்ன செய்தது? மன்னிப்பு கேட்டதா? இல்லை!

"எங்கள் சொத்துக்களை (அபினை) அழித்துவிட்டீர்கள்! தடையற்ற வர்த்தகத்தைத் தடுத்துவிட்டீர்கள்!" என்று கூறி, பிரிட்டன் தனது நவீனக் கடற்படையைச் சீனாவுக்கு அனுப்பியது.


சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் போர் தொடங்கியது. இதுவே முதல் "அபின் போர்" (First Opium War) (1839-1842).எனப்பட்டது.

பழைய வாள்களையும், ஈட்டிகளையும் வைத்திருந்த சீன இராணுவம், பிரித்தானியாவின்  நவீனப் பீரங்கிக் கப்பல்களை எதிர்க்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. சீனா சரணடைந்தது. அவமானகரமான 'நான்ஜிங் ஒப்பந்தத்தில்’ (Treaty of Nanjing) கையெழுத்திட்டது.(The Treaty of Nanking (or Nanjing), signed August 29, 1842)


அந்த ஒப்பந்தத்தம் சீனாவிற்கு பல பொறிகளை வைத்தது.

* சீனா, பிரிட்டனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது,இதனால் சீனா 2.1 கோடி யுவான் (21 million silver dollars) மதிப்பிலான இழப்பீட்டை இங்கிலாந்துக்கு கட்ட வேண்டியிருந்தது

* சீனத் துறைமுகங்களை பிரித்தானியாவிற்குத் திறக்கப்பட வேண்டும்.அதில் ஐந்து முக்கிய துறைமுகங்களை, அதாவது குவாங்சோ, ஷியாமென், ஃபூஷோ, நிங்போ, ஷாங்காய் ஆகிய துறை முகங்களை பிரித்தானி வணிகத்துக்கு திறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

*சீனா தானாக விரும்பியபடி சுங்கவரி விதிக்க முடியாது. பிரித்தானியா விதிகளுக்கு இணங்க சுங்கவரி நிர்ணயிக்க நேரிட்டது.

*பிரித்தானிய குடிமக்கள் மீது சீன சட்டம் நேரடியாகப் பொருந்தாது. அவர்களுக்கு தனி சட்ட பாதுகாப்பு (extraterritorial rights) கிடைத்தது.

* மிக முக்கியமாக, ஹாங்காங் (Hong Kong) தீவு, பிரித்தானியாவிற்கு சொந்தமாக்கப்பட்டது.

இதுதான் சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானத்தின்’ (Century of Humiliation) தொடக்கம்.

இப்போது, இந்த வரலாற்று நிகழ்வில் இந்தியவின் பங்கை நோக்கின், பிரித்தானியா அபினை விளைவித்தது சரி, அதைச் சீனாவுக்குக் கொண்டு சென்று விற்றது யார்?

பிரித்தானியக் கப்பல்கள் மட்டுமல்ல. பல இந்திய வர்த்தகர்களும் இதில் ஈடுபட்டனர். குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த பார்சி (Parsi) மற்றும் மார்வாடி சமூகத்தினர் ஆவர். அவர்களில் முக்கியமானவர்கள் டாட்டா (Tata) மற்றும் ஜீஜீபாய் (Jeejeebhoy) குடும்பத்தினர். பார்சி இனத்தவரான டாட்டா குடும்பத்தினர் இப்படித்தான் செல்வம் கொழிக்கத் தொடங்கினார்கள்.

ஜாம்செட்ஜி டாட்டா (Jamsetji Tata), நவீன இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். இவரது தந்தை நுஸர்வான்ஜி டாட்டா மற்றும் ஜாம்செட்ஜி டாட்டா ஆகியோர், தங்கள் ஆரம்பகால மூலதனத்தை, சீனாவுடனான அபின் வர்த்தகத்தில் தான் ஈட்டினார்கள்.

அவர்கள் குஜராத் மற்றும் மால்வா பகுதிகளில் விளைந்த அபினை, கப்பல்களில் ஏற்றிச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தனர். "டாட்டா அண்ட் கோ" என்ற பெயரில் ஷாங்காய் நகரில் கிளை அலுவலகம் கூடத் திறக்கப்பட்டது.

இந்த அபின் வர்த்தகத்தில் கிடைத்த அந்த அபரிமிதமான இலாபம் தான், பின்னாளில் இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலை (Tata Steel), தாஜ் ஹோட்டல், மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கான மூலதனமாக (Capital) மாறியது.

மும்பை நகரம் இன்று ஒரு பிரம்மாண்டமான வர்த்தக மையமாக இருப்பதற்கு, அன்று சீனாவில் விற்கப்பட்ட அபினின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாத, கசப்பான உண்மை. டாட்டா மட்டுமல்ல, பல பார்சி மற்றும் மார்வாடி வர்த்தகக் குடும்பங்கள் இந்த வழியில் தான் வளர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சீனா ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறது? ஏன் தைவான் விஷயத்திலும், தென் சீனக் கடலிலும் பிடிவாதமாக இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள, நாம் இந்த வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

சீனப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் முதல் பாடம் எது தெரியுமா,'நூற்றாண்டு அவமானம்’. ’நாம் பலவீனமாக இருந்தோம்; அதனால் போதை மருந்து கொடுத்து நம்மை அழித்தார்கள். நம் நிலங்களைப் பறித்தார்கள். இனி ஒருபோதும் சீனா அப்படி ஏமாறக் கூடாது. இனி ஒருபோதும் சீனா பலவீனமாக இருக்கக்கூடாது.’

ஜி ஜின்பிங் பேசும், "சீனக் கனவு" (Chinese Dream) என்பது, இந்த 150 ஆண்டுகால அவமானத்தைத் துடைத்து, மீண்டும் உலகத்தின் உச்சிக்குச் செல்வதுதான்.

வரலாறு விசித்திரமானது.

அன்று இந்தியா விளைவித்த அபின், சீனாவை அழித்தது.

அன்று ஈட்டிய இலாபம், இந்தியாவின் நவீனத் தொழில்துறைக்கு அடித்தளமிட்டது.

அன்று அவமானப்பட்ட சீனா, இன்று அந்த வடுக்களைச் சரிசெய்ய, உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

"வரலாற்றை மறப்பவர்கள், அதை மீண்டும் வாழச் சபிக்கப்படுவார்கள்" என்பதுதான் உண்மை.இது சீனாவிற்கு மட்டுமல்ல, தமிழ் இனத்துக்கும் பொருந்தும்.

"வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் மிகக் கடினமானது. ஓர் இனத்தை வேரறுக்கப் பெரும் போர் தேவையில்லை,போதை ஒன்றே போதும்" என்பது சீன வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம். அன்று சீனா அபின் புகையில் சரிந்தது, இன்று நம் நாடும், இளைஞர்களும் கஞ்சா புகையிலும், ஐஸ் போதையிலும், மதுவின் பிடியிலும் சிக்கித் தள்ளாடுகிறனர்.

அன்று சீனாவைச் சீரழிக்க பிரித்தானியா எனும் அந்நிய சக்தி இருந்தது. ஆனால் இன்று? நம் சொந்த மண்ணிலேயே, நம் வருங்காலத் தலைமுறையானது, கல்வி கற்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி, சிந்தனை மழுங்கி வீதியில் திரிகிறது. அன்று குடித்தாலே பாவம், தவறு என்று யாருக்கும் தெரியாமல் மறைத்துக் குடித்தார்கள். ஆனால், இன்று மீசை முளைப்பதற்கு முன்பே வீதியோரங்களில் அமர்ந்து குடித்துக் களிக்கிறார்கள் நமது விடலைகள்.பொறுப்புள்ள சமூகப் பெரியவர்கள் இதை கண்டு இன்று ஒதுங்கிப் போகின்றனர்.

நூற்றாண்டு கால அவமானத்திலிருந்து (Century of Humiliation) சீனா மீண்டு, இன்று வல்லரசாகிவிட்டது. 

ஆனால், உலகம் போற்றும் அறிவுச் சமூகமாகத் திகழ்ந்த தமிழினம், இன்று தன் இளைய தலைமுறையைப் போதைக்குப் பலிகொடுத்து விட்டு, மீள முடியாத இருளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உலகிற்கே வணிகத்தையும், அறத்தையும் கற்றுக்கொடுத்த ஓர் அறிவுச் சமூகம், தமது இருப்புக்காக, சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் சமூகம் இன்று போதைப் பிடியில் சிக்கித்  தன் சுயத்தை இழந்து புத்தி மழுங்கி கத்தியுடன் நிற்பது தான் காலத்தின் கோலம்.

அன்று பிரித்தானியர் அபினைக் கொண்டு சீனாவை அழித்தார்கள். சீனா போதை பொருளால் வீழ்ந்த சாம்ராஜ்ஜியமாகியது. பிரித்தானியா செய்த வரலாற்றுத் துரோகம் இது!இன்று பிரித்தானியா தன்னை மனித உரிமைகளின் மீட்பாராகவும், ஜனநாயகத்தின் வழிகாட்டியாகவும் காட்டி நிற்கிறது.

ஆனால், இன்று பேராசை கொண்ட நபர்களும், குழுக்களும் எமது இளைஞர்களை,சிறுவர்களை ஐஸ் போதை மயக்கத்திலும், மது போதையிலும் தள்ளி வேரறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

'நம் பிள்ளைகளுக்குப் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைப்பதை விட, போதையில்லாத தெளிவான புத்தியையும், சுயமரியாதையையும் சேர்த்து வைப்பதே மிகச் சிறந்த சொத்து. இல்லையேல், நாளைய வரலாறு நம்மை கேலி செய்யும்.  'போதையால்  வீழ்ந்த இனம்' என்றே பதிவு செய்யும்!'

ஒரு இனத்தைக் காப்பது அதன் இளைஞர்களை காப்பதில் தொடங்குகிறது.

அது அனைத்து சமூக கட்டுமானங்களினதும் பொறுப்பு!

மிளிரும் வீடுகளும்,பெறுமதியான வாகனங்களும், ஆடம்பர வாழ்வும் சமூக ஆரோக்கியத்தை பிரதிபலிக்காது.சமூக ஆரோக்கியம் பகுத்தறிவும் தெளிவான சிந்தனையுடன் அயலவனை நேசிக்கும் பண்புள்ள சமூகமாக வளருவதே ஆரோக்கியமானது.

வரலாறு எம்மை எச்சரிக்கிறது
“போதையால் வீழ்ந்த ஒரு இனம், ஒருபோதும் தன் எதிர்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்ப  முடியாது.” என்று.

அன்று சீனாவே அபினால் வீழ்ந்தது. இன்று அதே சூழலின் நிழல் நம் சமூகத்தையும் மூடியுள்ளது. நாமாக விழித்தெழ வேண்டும்.  இதற்கான பொறுப்பு பெரியவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மத தலைவர்கள், அரசு, எல்லோருடையதும் தான்.

இல்லையேல்… வரலாறே நம்மைப் பற்றிக் இவ்வாறு கூறும்:
“தம் தலைமுறையைப் பாதுகாக்கத் தவறியதால் வீழ்ந்த இனம் ஒன்று இங்கு இருந்தது” என்று.

"Humiliation does not break a nation; it awakens it.”

நா.இராஜமனோகரன்
08 December 2025

Sunday, November 2, 2025

 GovPay அடுத்தகட்ட தொழில்நுட்ப நகர்வு...



இலங்கையின் டிஜிட்டல் கட்டண முறையான GovPay, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) நோக்கிய உலகளாவிய போக்கை இங்கு பிரதிபலிக்கிறது, ஆனால் அதன் வெற்றி சைபர் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் பொது நம்பிக்கையில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை  பொறுத்தது அதன் வெற்றி அமையும்.

சரி,

நீங்கள் சாரதியாக இருக்கும்பட்சத்தில் இலங்கையில் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த தண்டத்தை செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள்!

நீங்கள் தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம், வரிசையில் நிற்க வேண்டாம், காவல் நிலையத்திற்குத் செல்லவேண்டிய அவசியமில்லை. ஏப்ரல் 2025 இல் சோதனை முறையில் தொடங்கப்பட்ட ஒரு புரட்சிகரமான Digital கட்டண முறையான GovPay உடன் இது இப்போது ஒரு யதார்த்தமாகிவிட்டது.

ICTA மற்றும்  Digital அமைச்சகத்தால், இலங்கை காவல்துறை மற்றும் LankaPay உடன் இணைந்து, GovPay, வாகன ஓட்டுநர்கள் கைபேசி வங்கி செயலிகள் மற்றும் இணைய வங்கி மூலம் உடனடியாக அபராதம் செலுத்த இது அனுமதிக்கிறது!

பெரும்பாலும்  வீதியோரத்தில் இருக்கும்போதே இதை நீங்கள் செய்யமுடியும் என்பது தான் இதன் இலகு நிலை.

சுருங்கக் கூறின்!,

"இலங்கையில் GovPay என்பது அரச சேவைகளுக்கான பணப்பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தும் ஒரு நிகழ்நிலைக் கட்டண தளம்" ஆகும். 

இது 2025 பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இலங்கையின் Digital  பொருளாதார மாற்றத்தின் முக்கிய அங்கமாகும் இது பார்க்கப்படுகிறது.

GovPay-இன் முக்கிய அம்சங்கள்
(Key Features of GovPay)

1.மையப்படுத்தப்பட்ட கட்டண தளம் 
(Centralized Payment Platform)

GovPay, ICTA மற்றும் LankaPay இணைந்து உருவாக்கிய ஒரு ஒருங்கிணைந்த கட்டண தளம் ஆகும்.

2.பல்வேறு கட்டண முறைகள்
(Multiple Payment Methods)

வங்கி கணக்குகள், கார்டுகள், மற்றும் digital wallets. போன்ற பல்வேறு முறைகள் மூலம் கட்டணங்களை நீங்கள் செலுத்தலாம்.

3.பயனுகருநர் நட்பு அனுபவம் 
(User-Friendly Experience)

எளிமையான இடைமுகம் மற்றும் விரைவான பரிவர்த்தனைகளுடன் பயனுகருநர்ளுக்கு வசதியான அனுபவத்தை இது வழங்குகிறது.

4.பயன்பாட்டுத் தளங்கள்
(Access Platforms)

GovPay தளத்தை வங்கி செயலிகள், LANKAQR மற்றும் இணையதளம் மூலமாக அணுகலாம்.

5.பரிமாற்றக் கட்டணங்கள்( Transaction Fees)

பரிவர்த்தனை கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன( ரூ.50 இலிருந்து ரூ.15 வரை.)

GovPay ஆனது எமக்கு வேலையில் இருந்து விடுப்பு எடுப்பது அல்லது அபராதம் செலுத்த நீண்ட தூரம் பயணம் செய்வது போன்ற நாட்களை இல்லாது செய்கிறது.  பணம் செலுத்துவதிலிருந்து வாகனஉரிமத்தை திரும்பப் பெறுவது வரையிலான முழு செயல்முறையும் இப்போது குறித்த இடத்திலேயே நிகழலாம்.

டிஜிட்டல் சிட்டைகள் ஓட்டுநர் மற்றும் அதிகாரி இருவருக்கும் உடனடியாக அனுப்பப்படுகின்றன. இது இலஞ்சம் அல்லது கையூட்டுக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. இது சட்ட அமுலாக்கம் மற்றும் அரசு சேவைகளில் பொதுமக்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்புகிறது.

Hela Payமற்றும் iPay போன்ற பிரபலமான நிதி தொழில்நுட்ப பயன்பாடுகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், GovPay பலருக்கு அணுகக்கூடியதாக உள்ளது. இது ஒரே நேரத்தில் பல அபராதம் செலுத்துதல்களுக்கு வழிவிடுகின்றது.மற்றும் பயனுகருநர் அனுபவத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.GovPay மக்களை முறையான நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட ஊக்குவிக்கிறது என்பதுடன், இது பணப்புழக்கம் மற்றும் பரந்த நிதி உள்ளடக்கத்திற்கும் உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, மிக முக்கியமாக, GovPay ஒரு நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகிறது . அரசாங்க சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களை ஒரு விதிமுறையாக இது மாற்றுகிறது. இது இலங்கை முழுவதும் பரந்த நிநி  தொழில்நுட்பத்திற்கான  அடித்தளமாக இது அமையலாம்.

சிலர் இன்னும் பணத்தின் பரிவத்தனையையே விரும்புகிறார்கள் என்பதுடன், மேலும் டிஜிட்டல் அணுகல் குறித்த பிரச்சினைகளும் உள்ளன, குறிப்பாக முதியவர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே இது காணப்படுகிறது. தபால் துறை போன்ற பாரம்பரிய சேவைளுக்கு இதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளைக் குறைக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

பொதுவாக சில சவால்களை இங்கு குறிப்பிடலாம்...

1. தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு சவால்கள்

2. ஒழுங்குமுறை மற்றும் சட்ட ரீதியான சவால்கள்

3. பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நிதி உள்ளடக்கம்

4. பணம் செலுத்தும் பழக்கவழக்கங்களில் மாற்றம்

5. போக்குவரத்து அபராதங்கள் தொடர்பான சவால்கள்

6. பாரம்பரிய சேவைகள் மீது தாக்கம்
   
எவ்வாறாயினும், ஏப்ரல் 30, 2025 க்குப் பிறகு இந்த அமைப்பு நாடு தழுவிய அளவில் விரிவடைவதால், பல்வேறு விருப்பங்களை கவனத்தில் கொண்டு டிஜிட்டல் கல்வியறிவை விரிவுபடுத்துவதும் அவசியம்.

நா.இராஜமனோகரன்
22 April 2025

 "வர்த்தகப் போருக்கான சுழல் காற்று" 



"The Renminbi is not just a currency; it’s a reflection of China’s global ambition."

டிரம்பின் பொருளாதார நடவடிக்கையால் ஒரு வர்த்தகப் போருக்கான சுழல் காற்று வலுப்பெற்று வருவது அவதானிக்கக் கூடிய ஒன்று.

இதன் காரணமாக ஏற்பட்ட ஒரு விளைவு சீன மக்கள் வங்கியானது திடீரென டிஜிட்டல் RMB (Renminbi, Chinese Yuan) எல்லை கடந்த தீர்வாக, பத்து ASEAN நாடுகள் மற்றும் ஆறு மத்திய கிழக்கு நாடுகளுடன் முழுமையாக இணைக்கப்படும் என்று அறிவித்ததுள்ளது. 
அதாவது உலகின் வர்த்தக அளவின் 38% அமெரிக்க டாலரால் ஆதிக்கம் செலுத்தப்படும் SWIFT அமைப்பைத் தவிர்த்து நேரடியாக " digital RMB moment "ல் நுழையும். 

இதனை பொருளாதார நிபுணர்கள் "Bretton Woods System 2.0 Outpost Battle", என்று அழைக்கின்றனர். ("பேட்டின் வூட்ஸ் சிஸ்டம் 2.0 அவுட்போஸ்ட் பற்றில்" என்பது உலகளாவிய நாணய அதிகாரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார வெளிப்பாடாகும். பாரம்பரிய அமெரிக்க தலைமையிலான நிதி அமைப்பின் ஆதிக்கத்திற்கு எதிராக எழும் சவாலை விவரிக்க தி எகனாமிஸ்ட் போன்ற வெளியீடுகளால் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.)

"The Economist" இதனை புதிய உலக நாணய ஒழுங்கின் ஆரம்பப் போர் (This as the opening battle of a new global monetary order).என்று வர்ணிக்கிறது.

மேலும்,SWIFT என்பது உலகளாவிய பரிவர்த்தனைக்கான கணினி வலைமைப்பாகும். இது பெரும்பாலும் அமெரிக்க டாலரை மையமாக கொண்டு செயல்படுவதால் அதில் இருந்து விலகி, டிஜிட்டல் ரென்மின்பி வழியாக நேரடி பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தை விளங்கிக்கொள்ள சீனாவின் Digital RMB (Digital RMB = Digital Renminbi (e-CNY)) பற்றி நாம் சுருக்கமாக பார்க்கலாம்.

Digital RMB என்பது சீனாவின் மத்திய வங்கி வெளியிடும் ஒரு மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) ஆகும்.

இது பரம்பரிய பணத்திற்கு மாற்றானது அல்ல, ஆனால் மின்னணு வடிவில் அரசு நிர்வகிக்கும் பணம்.இது Blockchain-ஐ (தகவல்களை (data/transactions) பாதுகாப்பாகச் சேமிக்கும், மாற்ற முடியாத, மையமில்லாத, தொகுதி வடிவமைப்பில் இயங்கும் ஒரு நவீன தொழில்நுட்பம்.) பயன்படுத்தி இயங்குகிறது.Digital RMB பொதுவாக Blockchain-இல் இயங்குகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் இது Permissioned Blockchain அல்லது Hybrid System ஆகும். அதாவது முழுமையாக மையமில்லாதது அல்ல.China’s e-CNY is centrally controlled கொண்டது. அது முக்கியமாக சீன மத்திய வங்கியால் பராமரிக்கப்படும் தனிப்பட்ட வலைப்பின்னல் ஆகும்.

இது அதிக வேகமான, குறைந்த கட்டணமுடைய, பாதுகாப்பான பரிவர்த்தனையை வழங்குகிறது.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதை சாதாரண செயலி அல்லது வங்கி கணக்குகள் வழியாக பயன்படுத்த முடியும்.

இதே போல SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) ஆனது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை செய்திகளை பரிமாறும் இணையம் ஆகும். இதில் 11,000 மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன.இதனூடாக பெரும்பாலும் பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலர் வழியாகவே நடைபெறுகின்றன.SWIFT ஆனது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தின் முக்கியமான கருவியா இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவானது SWIFT வழியாக தனது எதிரி நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை (sanctions) விதித்து வருகின்றது.இதன் விளைவாக தான் சீனா இதற்கு மாற்றாக RMB-ஐ உலக நாணயமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. SWIFT-ஐ புறக்கணிப்பதன் ஊடாக, சீனாவின் RMB முன்னிலைப்படுத்த இது உதவலாம். இதனால் உலக பொருளாதாரத்துக்கு இந்த நடவடிக்கை பல மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு எதிர்பார்க்கும் மாற்றங்களாக சிலவற்றை குறிப்பிடலாம்!

1.அமெரிக்க டாலரின் தேவையை இது குறைக்கும்.

2.சீனாவின் ரென்மின்பி (RMB) ஒரு சர்வதேச வர்த்தக நாணயமாக மாறும்.

3.வாடிக்கையாளர்களும், வணிக நிறுவனங்களும் மிக விரைவாக பண பரிமாற்றம் செய்ய முடியும். ( China-Indonesia "Two Countries, Two Parks" திட்டத்தில், Industrial and Commercial Bank of China (ICBC) முதல் முதலில் எல்லை கடந்த கட்டண நடவடிக்கையை முடிக்க டிஜிட்டல் RMB ஐப் பயன்படுத்தியது, இது கட்டளை உறுதிப்படுத்தலில் இருந்து நிதி வருவதற்கு 8 வினாடிகள் மட்டுமே எடுத்தது, இது பாரம்பரிய முறைகளை விட 100 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.)

4.Blockchain பயன்படுத்துவதால், பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் வசதியாக இருக்கும்.

5.அரசியல் பாகுபாடுகள் (sanctions) செயலிழக்க வாய்ப்பு உள்ளது – காரணம் அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள SWIFT இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையை இது ஏற்படுத்தும்

இது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல;
உலகளாவிய அரசியல், நாணய ஆதிக்கம் மற்றும் பன்முக பொருளாதார அமைப்பின் இயக்கவியல் ஆகியவற்றை மறு வடிவமைக்கும் ஒரு பெரிய மாற்றமாகும்.

Digital RMB சீனா உருவாக்கியதன் நோக்கங்கள்:

1. உலகளாவிய பரிவர்த்தனையை அமெரிக்க டாலரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க(US Dollar மீதான அடிமைத் தன்மையை குறைக்க.)

2. மொபைல் பணத்திற்குள் அரசின் கண்காணிப்பினைக் கொண்டுவர.

3. பணமதிப்பை கையாளும் தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த. (அதாவது Alipay, WeChat Pay மீது கட்டுப்பாடு)

4. சர்வதேச வர்த்தகத்தில் RMB-ஐ ஒரு நாணயமாக மாற்ற.

5. கடன், ஊதியம், திட்ட நிதிகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்க.

போன்ற காரணங்களுக்காக RMB உருவாக்கப்பட்டது. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் மையப் பங்கிற்கு இது வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புதிய நிதி சூழல் எனலாம்.
“cashless”, “borderless”, “state-controlled” economy என்று நாம் இதனை குறிப்பிட முடியும்.

இவற்றை தவிர RMB நோக்கி நாடுகள் நகர்ந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை வளர்முக நாடான எமது நாட்டை அடிப்படையாக வைத்து நோக்குவோம்.

சீன யுவான் (RMB) நோக்கி இலங்கை சாய்ந்தால் ஏற்படும் விளைவுகள்....

1. அந்த நாணயத்தில் தங்கியிருக்க வேண்டி (Currency Dependence) எமக்கு ஏற்படும்.இலங்கை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக RMB பயன்படுத்தத் தொடங்கினால்,நாணய வீச்சில் (exchange rate volatility) அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

சீனாவின் உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் இலங்கை நாணயத்தையும் பாதிக்கக்கூடும்.

2. RMB-யில் கடன்கள் பெற்றால், சீனாவின் நிபந்தனைகள் கடுமையானதாக இருக்கலாம்.கடன் அடைக்க முடியாத நிலையில், சொத்துக்களை (துறைமுகம், நிலம்) சீனா கைப்பற்றும் Debt Trap Diplomacy ஆபத்து இதில் உள்ளது.

3. உலக நாணய மையத்திலிருந்து இலங்கை விலகும் போது,மேற்கத்திய நிதி ஆதரவு (IMF, World Bank) போன்றவை மெதுவாக இலங்கையை கை கழுவி விடும் சாத்தியம் உள்ளது.

அதன் பின் இலங்கை, ஒரு நாட்டின் பிடியில் தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது.

4. தந்திரோபாய நெகிழ்வுத்தன்மை இழப்பு(loss of strategic flexibility ) காரணமாக, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுடனான நாணய மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு குறைவதற்கான ஆபத்து உள்ளது.இது உலக அரங்கில் இலங்கையின் பரந்த புவிசார் அரசியல் ஈடுபாடு மற்றும் இராஜதந்திர சமநிலையையும் பாதிக்கலாம்.

5. RMB சார்பு அதிகமானால், சீனாவின் அரசியல் ஆதிக்கமும் அதிகரிக்கும்.புவியியல் தலையீடுகள் (Geopolitical Influence) இலங்கை சில சுயாதீன முடிவுகளை எடுக்க முடியாத நிலையை உருவாக்கும் (உதாரணம்:சர்வதேச வாக்கெடுப்புகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள்).

இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது
கடன் பொறி (Debt Trap)ஆகும்.

"கடன் பொறி" (Debt Trap) என்பது, "ஒரு நாடு தொடர்ந்து கடன் எடுத்து, அதை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு செல்லும் பொருளாதார நெருக்கடி"யை இது குறிக்கும். 

கடன் பொறி எவ்வாறு செயற்படுகிறது என எளிமையாக நோக்கின்,ஒரு நாடு கடன் எடுக்கிறது (உதாரணம்: சீனாவிலிருந்து), அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை அல்லது காலம் நீண்டு செல்ல கடன் வாங்கிய நாடு கடனை அடைக்க அல்லது வட்டி கட்ட மீண்டும் புதிய கடன் எடுக்கிறது.வட்டி கூட செலுத்த முடியாமல் போனால்,மேலும் மேலும் கடன் எடுக்கிறது.இதன் விளைவாக இறுதியில் தனது சொத்துக்களை கடன் வழங்கிய நாட்டிடம் இழக்க நேரிடும்.

இதைதான் “கடன் பொறி” என்பார்கள்.
கடன் → கடனைத் திருப்ப செலுத்த முடியாமை → மேலும் கடன் → சிக்கல் மேலும் மோசமாகும்.

இந்த கடன் சிக்கலில் சிக்கிய நாடாக எமது நாடான இலங்கையை குறிப்பிடலாம். இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தலே விமானநிலையம் பெருந்தெருக்கள் போன்ற கட்டுமானங்களுக்கு சீனாவிடமிருந்து கடன் பெற்றது. ஆனால் இவற்றால் வருமானம் மிக குறைவாகவே வந்தது. கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் அதிக வட்டி மட்டும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக சொத்துகளை சீனாவிற்கு கொடுத்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

Debt Trap Diplomacyயில் சிக்கியதாகப் பொதுவாகக் கூறப்படும் சில நாடுகள்

அ) ஜிபூட்டி (Djibouti)
சீனாவின் கடன்கள் அதிகம் பெற்றது, அதனால் கடலோரத்தளங்களை சீனாவின் இராணுவத் தளம் அமைக்க கையளித்தது.

ஆ) லாவோஸ் (Laos)

சீனாவின் Belt and Road திட்டத்தில் கடன் எடுத்து, பல பாதை மற்றும் புகைவண்டி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு கடன் சுமை அதிகரித்து வருகிறது.

இ) மாலத்தீவுகள் (Maldives)

சீனாவிடம் இருந்து அடிக்கடி கடன்கள் வாங்கப்பட்டு, நாட்டின் பொருளாதார கட்டுப்பாடு குறித்து கவலை எழுந்துள்ளதுடன் பல முக்கிய சொத்துக்கள் சீன முதலீட்டாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஈ) பாகிஸ்தான் (Pakistan)

சீன-பாகிஸ்தான் பொருளாதார வழி (CPEC-China-Pakistan Economic Corridor) திட்டத்தினால் அதிக கடன்கள் ஏற்பட்டு, திருப்பிச் செலுத்த முடியாத அளவில் கடன் சுமை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உ) மொண்டெநீக்ரோ (Montenegro)

சீனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட கடன்களால், ஒரு முக்கிய மோட்டார் பாதை திட்டம் மிகுந்த நிதி சுமையை இந்த நாட்டிற்கு கொண்டு வந்ததுள்ளது

இவை தவிர, ஆப்ரிக்கா, ஆசியா, மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற பகுதிகளில் உள்ள பல நாடுகள் சீனவின் கடன் பொறியில் சிக்கியுள்ளன என்ற விமர்சனங்கள் உள்ளன.

இப்போது எமக்கு விளங்கக் கொள்ளக் கூடியதாக இருக்கும் "கடன் பொறி இராஜதந்திரம்" (“Debt Trap Diplomacy ஜீ” ) என்று உலகளவில் குறிப்பிடப்படுகிற ஒரு புதுமையான நிலை பற்றி.

அரசியலோ, போரோ இல்லாமல், நிதி வழியாக ஒரு நாட்டை கடனூடாக சுற்றி வளைக்கும் இராஜதந்திரம் இது. இதை தான் எமது முன்னோர் "இறால் போட்டு சுறா பிடிப்பது"எனக் கூறுவார்கள்.

ஒரு நாடு கடன் பொறியை (Debt Trap)ஐ எவ்வாறு தவிர்க்க முடியும்...

1. அதிரடி வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் அளவுக்கு மீறிய கடன்கள் எடுக்காமல் இருக்க வேண்டும்.

2. சுயநிறைவு கொண்ட வருவாய் திட்டங்களை நாடுகள் உருவாக்க வேண்டும்.

3. நாட்டின் சொத்துகளை உறுதியாக வைத்திருக்கும் சட்ட பாதுகாப்பு இங்கு மிக அவசியம்.

4. பல நாடுகளிடமிருந்து சமமான அளவில் நிதி உதவிகளைப் பெறுவது நல்லது – ஒரு நாட்டிடம் அதீத நம்பிக்கை காரணமாக முழுமையாக சென்று சிக்காமல் இருக்கவேண்டும்.

எமது அண்டைய நாடான இந்தியா – Debt Trap Diplomacy-ஐ எப்படி தவிர்க்கிறது எனப் பார்ப்பது இங்கு அவசியம்.

அ. பரந்த முதலீட்டு உடன்பாடுகள் (Diversified Partners) மூலம் இந்தியா சீனாவை மட்டுமல்லாமல் Japan, USA, European Union, Middle East போன்ற பல நாடுகளுடனும் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுகின்றது.

இது ஒரு குறித்த நாட்டின் மீதான சார்பை குறைக்க உதவுகிறது.

ஆ. திட்ட மதிப்பீட்டு (Project Evaluation) அபிவிருத்தி மூலம் கடன் தேவையை தீர்மானிக்கிறது.வர்த்தக ரீதியாக பயனற்ற திட்டங்களை இந்தியா தற்போது சீராக மதிப்பீடு செய்கிறது. அதாவது – ROI (Return on Investment) பார்க்கப்படுகின்றது. (ROI என்பது, ஒரு திட்டத்தில், வர்த்தகத்தில் அல்லது முதலீட்டில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு மீளப்பெறும் பலனை (return) கூறும் ஒரு சதவீத மதிப்பு.)

இந்தியா "வளர்ச்சி" என்ற பெயரில் "நஷ்டம் தரும் பாரிய திட்டங்களில்" முதலீடு செய்வது குறைவு.

இ. திட்டங்களை Public-Private Partnership (PPP) முறையில் செயல்படுத்துகின்றது அதாவது அரசு சார்பில் அல்லாமல், தனியாரும் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன – இதனால் தேறிய அரச கடன் சுமை குறையும்.

ஈ. மத்திய வங்கியினால் கண்காணிப்பு (RBI) மேற்கொள்ளப்படுகின்றது.வெளிநாட்டு கடன்கள் எவ்வளவு?,எந்த நோக்கில்?, யாரிடமிருந்து? என்பதை RBI முறையாக கண்காணிக்கிறது.

இதன் மூலம் இந்தியா கடன் பொறியில் சிக்காமல் இருந்து வருகின்றது. ஆனால் இலங்கை – Debt Trap Diplomacyயின் மிகவும் குறிப்பிடத்தக்க, உலகளவில் பேசப்பட்ட நாடாக காணப்படுகின்றது.RMB-யில் கடன்கள், இலாபமில்லாத பாரிய திட்டங்கள்(mega projects) மற்றும் சொத்து ஒப்படைப்பு ஆகியவை அதன் நிதி தன்னாட்சியை வெகுவாக பாதித்தன என்பது இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் யாதெனில்,RMB-யின் நிலைத்தன்மை குறைவு அதாவது, சீனாவின் நாணயத்தை அரசு கட்டுப்படுத்துவதால், மற்ற நாடுகளால் இந்த நடவடிக்கையை முழுமையாக நம்ப முடியவில்லை என்பதுடன் RMB உலக ஒழுங்கை மாற்றும் சக்தியாக மெல்ல, ஆனால் தெளிவாக உருவெடுக்கிறது என்பதும் இது அமெரிக்க டாலரின் வலிமையையும், மேலைத்தேய மத்திய உலகலாவிய நிதி ஒழுங்கையும் (Western-centric global financial system) சவாலுக்கு உட்படுத்துகின்றது என்பதும் நிதர்சனம்.

"I checked my wallet and found some RMB. I guess I'm officially part of the Chinese economy now!"

நா.இராஜமனோகரன்
13 April 2025