Sunday, April 13, 2014

புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்...

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடி பணியாதீர்கள்.

பார்வையை விரிவுபடுத்துங்கள் !


 

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று
அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனா ல் பின் மூவரும் முயற்சி எடுப் பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான்.
நான் இரண்டு சீப்புகள் புத்த மடால யத்திற்கு விற்றேன்
வியாபாரிகேட்டான். “எப்படி?”
புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்.

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்
வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”
வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்தமடால யத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்ஒரு பெரிய 
கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால்அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோச னையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கி னார்கள்
வியாபாரி அந்த மகனைப் பாராட் டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்ப னை செய்தேன்

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”

அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு
ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத்தூண்ட உதவும் என்றேன்”.

அந்த மடாலயத் தலைவர்என்ன நினைவுப் பரிசு தரலாம்?” என்று மடாலயத் தலைவர் கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். “அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும்” என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத் தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்.

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நி லைக்குத்தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.

ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படாவிட் டால் வேறெதற்காவது பயன் படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்தபிக் குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்புபயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சி யாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்கு களுக்குப் பயனில்லா விட்டா லும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனை யைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவ ர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசி யாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன்எடுத்துக்கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒருமுறை யோடு முடிகிற விற்பனை அல்ல . புத்த மடாலயத்திற்கு நன்கொ டைகள் தருகிறவர்கள்அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

ஒரு சூழ்நிலையை ஒரே நேர் கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங் களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமை யையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பல மட ங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய்புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.



எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமை யுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக் கூடும்.


Monday, March 24, 2014

வாழ்விற்குள் வாழ!

எட்டவில்லை
நண்ப
என்ன செய்தி !

காதுகளை கூராக்கி,
கேள் ;
எனக்குச் சொல்!
எட்டவில்லை.

எதிர்காலம்
வாழ்விழந்த
வாழ்வென்றால்
கருவறைக்குள் மீண்டும்,
உறைந்து
கலைந்து
விடாய் ஆகி
போகின்றேன்!

நான்
மறைந்தொழிந்த
செய்தி
கருவறைகுள் நிற்கட்டும்,
கல்லறைக்கு வேண்டாம்.

வாழ்விழந்த வாழ்வை
சுமந்து
நடை மெலிந்து,
கல்லறைகு செல்லல்
பயனற்ற
பயணம் -மிகத்தொலைவு
வீண் அலைச்சல்
மீள்கின்றேன்
கருவறைக்கு
மிகக்கிட்ட!

என்ன செய்தி
தெளிவாகச் சொல்
வாழ்விற்குள்
வாழ்வென்றால்
வாழத் தயார்- நான்
இல்லையெனில்
சொல்,
செல்ல!


(1998ல் என்னால்  எழுதப்பட்டது.)

Tuesday, February 25, 2014

"நல்லதுக்காக கெட்டப் பெயரை ஏற்பதற்கு நான் தயார்”

மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து தெய்வங்களும் 33 கோடி தேவர்களும் வைகுண்டத்தில் சங்கமித்தார்கள். ராமாவதாரத்தில் எந்தெந்த பாத்திரங்கள் வரும், அவற்றை யார், யார் ஏற்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு வந்தது.



எல்லா பாத்திரங்களுக்கும் யார் பொறுப்பேற்பது என்பது தீர்மானமாகிவிட்டது. சிவனும் கூட ஆஞ்சநேயர் பாத்திரத்திற்குத் தயாராகிவிட்டார். ஆனால் ஒரே ஒரு பாத்திரத்திற்கு மட்டும் பதில் இல்லை. அது மந்தாரை என்ற கூனி பாத்திரம். உண்மையில் ராமாயணத்தில் திருப்பம் ஏற்படுத்துவது இந்தப் பாத்திரம்தான். ராமனைக் காட்டுக்கு அனுப்புமாறு கைகேயியைத் தூண்டிவிடுபவள் மந்தாரை. ராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டால் மட்டுமே அவதார நோக்கமான ராவண வதம் சாத்தியமாகும். ஆனால், இத்தகைய நல்ல செயலைச் செய்யும் அந்தப் பாத்திரமோ ராமாயணத்தின் ஆயுட்காலம் முழுவதும் மக்களால் சபிக்கப்படும். யார் தான் அந்தப் பாத்திரத்தை ஏற்பார்கள்? ஒருத்தரும் முன்வரவில்லை.




“மந்தாரை பாத்திரத்திற்கு யாரும் தயாரில்லையா? அவள் வரவில்லையென்றால் ராமாவதாரம் வீணாகி விடும்” என்று சொல்லிப் பார்க்கிறார் பரந்தாமன். அப்போதும் தேவலோக மங்கைகள் மௌனம் சாதிக்கிறார்கள்.

“நான் தயார்” என்று ஒரு குரல் கேட்கிறது. திரும்பினால், அது கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவி. “என்ன நீயா? உலகம் உன்னை காலமெல்லாம் சபிக்குமே?” என்கிறார் அவளின் கணவனான பிரம்ம தேவர். “இருக்கட்டுமே. நான் ஒருத்தி சாபம் வாங்கினாலும் ராமாவதாரத்தின் நோக்கம் நிறைவேறுமே. நல்லதுக்காக கெட்டப் பெயரை ஏற்பதற்கு நான் தயார்” என்று அழுத்தமாகச் சொல்கிறார் சரஸ்வதி தேவி.

அங்கிருக்கும் அத்தனை கரங்களும் அவளை நோக்கி கும்பிடுகின்றன.

(ஒரு செவி வழி கதை)




Tuesday, February 18, 2014

பல் செட்டுக்காக...!



ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;

கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.

ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.

பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.

இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.


கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து, சாம்பார், சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.

ஓட்டலில் இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்.

ஒரு இளைஞன் அவர்களிடம் வந்து,இன்னொரு தட்டு இட்லி வடை தான் வாங்கித்தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் ,தாங்கள் எப்போதுமே பகிர்வதே பழக்கம் எனக் கூறி.

கணவன் சாப்பிட்டு முடித்தான்.

கை கழுவப்போனான்.

இளைஞன் மீண்டும் வந்து மனைவியிடம் கேட்டான்”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்ல?”





அவள் கூறினாள் ”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!!”